முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி பல மடங்கு பெருகும் - முதல்வர் எடப்பாடி பேச்சு.

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

 சென்னை : திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதியும்,திறன் வாய்ந்த மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கையும் பல மடங்கும் பெருகும் என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.

இந்தியா தொழில் கூட்டமைப்பும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய கனெக்ட் 2018 மாநாடு சென்னையில் நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

டிஜிட்டல் பொருளாதாரம் என்பது, தற்பொழுது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய புரட்சி.   இதன் மூலம்  மூன்றாவது தொழில் புரட்சி ஏற்படும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  வருங்காலத்தில் மனிதனின் தினசரி நடவடிக்கைகளும், செயல்பாடுகளும், டிஜிட்டல் முறையைச் சார்ந்தே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.  இதனால் இத்துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகி நாட்டின்  பொருளாதார நிலை மேம்படும்.  உலகம் முழுவதும்  பரவி வரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியானது,  சமமான வளர்ச்சியை தூண்டுவதற்கும், புதிய கருவிகள்,     நடைமுறைகள்,     வளங்கள்,  சேவைகள்,     தயாரிப்புகள்,     திறன்   மற்றும்  சமீபத்திய தொழில் நுட்பங்களை சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் அடைய வழிவகுக்கிறது.

இதன்மூலம் அதிக வேலை வாய்ப்பு உருவாக்குதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், குடிமக்களுக்கு விரைவான சேவைகளை  வழங்குதல், நேரத்தையும், ஆற்றலையும் சேமித்து, மக்களின் வாழ்க்கையை மிகவும் எளியதாக்குதல் போன்றவற்றை. தகவல் தொழில்நுட்பம் பெரிய அளவில் மாற்றியுள்ளது.   மாநிலத்தின்  மொத்த தகவல் தொழில்நுட்பவியல் உள்ளடக்கிய  சேவை துறையின் பங்களிப்பு, 7.93 சதவீதமாக உள்ளது. தற்காலத் தகவல் தொழில்நுட்பத்தின்  புதிய பரிமாணங்களான   மேகக் கணினியம்,  இயந்திரக் கற்றல்,   செயற்கை  நுண்ணறிவு,  ரோபோ தொழில் நுட்பம்,   முப்பரிமான அச்சிடுதல், மருத்துவத் தொழில் நுட்பம்,  வேளாண் தொழில் நுட்பம், பல்பொருள் இணையம், மின்னணு அமைப்பு  வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, அனிமேஷன்  மற்றும் விளையாட்டு தரவு பகுப்பாய்வு, வணிக நுண்ணறிவு மென்பொருள், தரவு கிடங்கு மற்றும் தமிழகத்தில் முதலீடுகள் சார்ந்த தரவு மையங்கள் வங்கி மற்றும் வணிக சேவைகளில் தகவல் தொழில்நுட்பவியல் பயன்பாடுகள் போன்றவை அம்மாவின் அரசால் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை இன்று இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப தலைநகரம் என்று கூறுகின்ற வகையில் பல புதிய தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.  மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன.  மற்ற நிறுவனங்களும் சென்னையில் தொடங்க விரும்புகின்றன.  நவீன தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றுகின்ற அளவிற்கு மனிதவள ஆற்றல் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.  இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணாக்கர்கள் பொறியியல் கல்லூரிகளில் தங்களது கல்வியினை முடித்து விட்டு திறமைமிக்க பொறியாளர்களாக வெளி வருகின்றனர். அவ்வாறு படிப்பை முடித்து வெளிவரும் பொறியாளர்கள், வெளிநாட்டில் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில்  பணிபுரியும் வகையில், அவர்களது செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்பது அம்மாவின் அரசின் விருப்பமாகும்.  அதனை நிறைவேற்றும் பொருட்டு, பொறியியல் பட்டதாரிகளுக்கான  செயல்திறன் மேம்பாடு மற்றும்  வேலை வாய்ப்பு மேம்படுத்துதல்  கலந்தாய்வு கூட்டம் ஒன்று என்னால்  10.9.2018 அன்று நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் போது மாநிலத்தின்  தகவல் தொழில்நுட்பவியல் துறையின் வளர்ச்சிக்காக அம்மாவின் அரசு  தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை -2018 ஐ வெளியிட்டது.   தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி மையமும்,  ஐந்து பொறியியல் மற்றும் பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரிகளில், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் அம்மாவின் அரசால் நிறுவப்பட்டுள்ளன.

திருவாளர்கள் சைமன்ஸ் மற்றும் திருவாளர்கள் டிசைன் டெக் லிமிடெட் ஆகியதொழில் நிறுவனங்களுடன் இணைந்து  546 கோடியே  84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  இச்சிறப்பு மையங்கள் வாயிலாக,  தமிழ்நாட்டில் தொழில் நுட்பக் கல்வி உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் திறன்களை மாணாக்கர்களிடையே மேம்படுத்துதல், வேலை வாய்ப்பு பெறும் வகையில், திறனை அதிகரிக்கச் செய்தல், தொழிற்சாலைகளின் தற்கால எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு  திறனை மேம்படுத்துதல் ஆகிய  முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இத்திட்டத்தின் மூலம் பட்டய மற்றும் பட்ட வகுப்புகளில் பயின்று வரும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, அவர்கள் எளிதாக வேலை வாய்ப்பு பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மேலும் தொழிலகங்களிலிருந்து கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு  அவர்களது தொழில் திறனை மெருகூட்ட  இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 2017-18 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து  179 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 38 ஆயிரமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.  தற்பொழுது அளிக்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம்  தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியும், திறன் வாய்ந்த மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கையும் பல மடங்கும் பெருகும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து