2-வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்: மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை கைபற்றும் முனைப்பில் இந்திய அணி

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      விளையாட்டு
indian team against WI 2018 10 11

ஐதராபாத் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைபற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் வீழ்த்தும்....

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் வென்று இந்தியா தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி பலவீனமான வெஸ்ட் இண்டீஸை எளிதில் மீண்டும் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டை ‘டிரா’ செய்தாலே இந்தியா தொடரை கைப்பற்றி விடும்.

புதுமுக வீரர் ...

2013-ம் ஆண்டில் இருந்து இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது இல்லை. அந்த சாதனை வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராகவும் நீடிக்கும். கடந்த டெஸ்டில் கேப்டன் விராட் கோலி, புதுமுக வீரர் பிரித்வி ஷா, ஜடேஜா ஆகியோர் சதம் அடித்து முத்திரை பதித்தனர். இதேபோல் புஜாரா, ரி‌ஷப் பந்த் ஆகியோரும் சாதித்தனர். பந்து வீச்சில் அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது‌ ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ராஜ்கோட் டெஸ்டை போலவே இந்த போட்டி யிலும் இந்தியா தனது ஆதிக் கத்தை செலுத்தும்.

கடும் சவாலானது

வெஸ்ட்இண்டீஸ் அணியை பொறுத்தவரை தொடரை இழக்காமல் இருக்க இந்த டெஸ்டில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. அனுபவமற்ற அந்த அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடும் சவாலானது. 1994-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவில் டெஸ்டை வென்றது கிடையாது. காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் ஹோல்டர் இந்த டெஸ்டில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் முன்னேற்றம் அடைவது அவசியம். முதல் டெஸ்டில் ‘பாலோ-ஆன்’ ஆகி தோற்ற அந்த அணி இந்த டெஸ்டில் கடுமையாக போராடுவார்கள்.

96-வது டெஸ்ட் போட்டி

இரு அணிகளும் இன்று மோதுவது 96-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 95 போட்டியில் இந்தியா 19-ல், வெஸ்ட் இண்டீஸ் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 46 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இன்றைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து