முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிசம்பர் முதல் வெளிநாட்டவர் மருத்துவ காப்பீட்டு கட்டணம் பிரிட்டனில் உயர்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன், இந்தியா உள்பட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான மருத்துவ காப்பீட்டுக் கட்டணம், பிரிட்டனில் வரும் டிசம்பர் மாதம் முதல் உயர்கிறது. இதனால், பிரிட்டனுக்கு கல்வி கற்பதற்காக செல்லும் வெளிநாட்டு மாணவர்கள், தொழில் நிமித்தமாக செல்வோர் விசா பெற விண்ணப்பிக்கும்போது கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

பிரிட்டனில் தேசிய சுகாதார சேவைகள் திட்டத்தின் கீழ் அந்நாட்டு மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டில் 6 மாதத்துக்கு மேல் தங்கும் இந்தியர்கள் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத வெளிநாட்டினருக்கு மருத்துவ காப்பீட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்திட்டம், கடந்த 2015-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

அதன்படி, பிரிட்டனில் தொழில் நிமித்தமாக தங்கும் வெளிநாட்டினருக்கு ஆண்டொன்றுக்கு 200 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களுக்கு சற்று சலுகை அளிக்கும் விதமாக ஆண்டுக்கு 150 பவுண்டுகள் வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகையை பிரிட்டன் செல்வதற்காக விசா பெற விண்ணப்பிக்கும் போதே வெளிநாட்டினர் செலுத்தியாக வேண்டும். இத்திட்டத்தின் கீழ், பிரிட்டனில் தங்கும் வெளிநாட்டினர், அங்குள்ள மருத்துவமனைகளில் கட்டணமின்றி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிலையில், மருத்துவ காப்பீட்டுக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தொழில் நிமித்தமாக பிரிட்டனில் தங்கும் வெளிநாட்டினரின் மருத்துவ காப்பீட்டுத் தொகையை 200 பவுண்டுகளில் இருந்து 400 பவுண்டுகளாகவும், மாணவர்களுக்கான கட்டணத்தை 150 பவுண்டுகளில் இருந்து 300 பவுண்டுகளாகவும் உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான பரிந்துரை அறிக்கை, பிரிட்டன் நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து மருத்துவ காப்பீட்டுக் கட்டணம் உயர்வு அமலுக்கு வரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து