முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : தகவல் சேமிப்புக் கொள்கை தொடர்பான விதிமுறைகளை தளர்த்துமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில், இந்திய நிறுவனங்கள் பணப்பட்டுவாடா தொடர்பான தரவுகளை இந்தியாவில் உள்ள சர்வர்களில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை 15-ம் தேதிக்குள்(நேற்று) சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக, அமெரிக்க பண பரிவர்த்தனை நிறுவனங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஜான் கார்னின், ஜனநாயகக் கட்சியின் எம்.பி. மார்க் வார்னர் ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது:-

ரிசர்வ் வங்கியின் இந்த கொள்கை, இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் தாமதம் ஏற்படலாம்.

ஒரு நிறுவனம் தங்களது தகவல்களை உயர்தரமான பாதுகாப்பு சர்வரில் உள்நாட்டில் வைத்திருந்தாலும், அந்த தகவல்கள் பாதுகாப்புடன் இருக்குமா? என்பது கேள்விக் குறிதான். இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும், உள்நாட்டிலேயே தகவல்களை சேமிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

உள்நாட்டில் மட்டுமன்றி, வேறு எந்த இடத்திலும் தகவல்களை சட்டபூர்வமான முறையில் பாதுகாப்பாக சேமித்து வைத்திருக்க முடியும். இதுதொடர்பாக, இந்தியா, அமெரிக்கா நாடுகளின் சட்ட அமலாக்கத் துறை இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெறுவதை வரவேற்கிறோம். எனவே, தகவல் சேமிப்புக் கொள்கை தொடர்பான விதிமுறைகளை தளர்த்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து