முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

672 பள்ளிகளில் "அடல் அறிவியல் ஆய்வகங்கள்' - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வரும் டிசம்பர் மாதத்துக்குள் 672 அரசுப் பள்ளிகளில் "அடல் அறிவியல் ஆய்வகங்கள்' அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

சென்னை எம்ஜிஆர் நகர், அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன்   தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிலும் 11.57 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கையடக்கக் கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கையடக்கக் கணினி ("டேப்') மூலம் மாணவர்கள் கல்வி கற்பது, ஓய்வு நேரங்களில் ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொள்வது போன்ற முயற்சிகள் ஊக்கப்படுத்தப்பட உள்ளன.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை போல் அறிவியல் விஞ்ஞானியாக வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிப் போட்டிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் பள்ளி மாணவர்களிடையே மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவர்.

இதேபோன்று அரசுப் பள்ளிகள் புதிய விஞ்ஞான வளர்ச்சியை எட்டும் வகையில், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 672 பள்ளிகளில் அடல் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும். தொடர்ந்து 2019 -ஆம் ஆண்டில் 1,000 பள்ளிகளில் இந்த ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டைவிட அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20,000 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். மேலும், தொடக்கப் பள்ளிகளில் இருந்து நடுநிலைப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை மாணவர்கள் இடைநிற்றல் 0.8 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து