முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

சபரிமலை : சபரிமலை கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளா மட்டுமல்லாது தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பா.ஜ.க. சார்பில் தலைமை செயலகத்தை நோக்கி பேரணியும் நடைபெற்றது. ஆனால் கேரள முதல்வர் பினராய் விஜயன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் போராட்டக்காரர்களுடன் தேவசம்போர்டு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியை தழுவி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.

இதையடுத்து, கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து கேரள அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பந்தளம் அரச குடும்பம், சபரிமலை கோயில் பூசாரிகள் மற்றும் இந்து அமைப்புகள் பேச்சு நடத்த வருமாறு, ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அழைப்பு விடுத்தது. திருவனந்தபுரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஐயப்ப சேவா சங்கம், ஐயப்ப சேவா சமாஜம், தந்திரி மகாமண்டலம் உள்ளிட்ட அமைப்புகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன. இந்நிலையில், சபரிமலை கோயிலில் இன்று நடை திறக்கப்படவுள்ள நிலையில் போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  பின்னர் இது குறித்து பந்தளம் அரண்மனை சார்பில் பங்கேற்ற சசிக்குமார் வர்மா கூறுகையில்,

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்வது பற்றி வரும்  19-ம் தேதி விவாதிப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையவில்லை. எங்களுடைய கோரிக்கைகளை ஏற்க அவர்கள் தயாரில்லை எனக் கூறினார்.

இதற்கிடையில், பூமாதா பிரிகேட்அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் சில பெண்களுடன் சபரிமலை கோயிலுக்கு செல்ல இருப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து