முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலியாகவுள்ள வீட்டுமனைகளில் டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகாத வண்ணம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் கலெக்டர் நடராஜன் வேண்டுகோள்

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை- மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 3, வார்டு 4, வார்டு 5, வார்டு 8 மற்றும் வார்டு 19 ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன்  டெங்கு தடுப்பு நடவடிக்கை ஆய்வு மேற்கொண்டார்.
 மாவட்ட ஆட்சித்தலைவர்   மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 3, வார்டு 5 ஆகிய வார்டுகளில் உள்ள வள்ளுவர் காலனி, மூவேந்தர் நகர், மூவேந்தர் நகர் விரிவாக்கம்,   வார்டு 8ல் அருள்தாஸ்புரம் முனியாண்டி கோயில் தெரு, மேலப்பொன்னகரம் 5வது தெரு, ரோஜா அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வார்டு 19க்குட்பட்ட திருமலைக்காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலிவீட்டுமனைப்பகுதிகள், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்கள், நீர்நிலைத்தொட்டிகள் மற்றும் வீட்டிலுள்ள குடிநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின் போது பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்:
 குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் டெங்கு கொசுப்புழுக்கள் ஏதும் உருவாகாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.  டெங்கு தடுப்பு குறித்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பொழுது சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.  மேலும் வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீட்டின் உள்ளே மற்றும் வெளியே உள்ள பகுதிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.  வீட்டின் சுற்றுப்புறத்தில் கழிவுநீர் ஏதும் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.  வீட்டின் மாடியில் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.  டயர் மற்றும் தேவையற்ற பொருட்கள் சாலையோரங்களில் இல்லாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். 
 குடியிருப்புச்சங்க பிரதிநிதிகள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள காலி வீட்டு மனைகளின் உரிமையாளர்களிடம் தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.  பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டியை நன்கு தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும். தண்ணீர் பானையை மூடி வைத்துக்கொள்ள வேண்டும். சுத்தமான ஆடையை உபயோகப்படுத்த வேண்டும். 24.10.2018 முதல் ஏ.டி.எஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தி கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு விதிப்படி அபராதம் விதிக்கப்படும்.  மேலும் பொதுமக்கள், டெங்கு களப்பணியாளர்கள் ஆய்வு செய்ய வரும் பொழுது உரிய ஒத்துழைப்பு கொடுத்து ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 
  இந்த ஆய்வு நடவடிக்கையின் போது கொசு ஒழிப்பு புகை அடித்து, நீர்நிலைத்தொட்டிகளில் அபேட் மருந்து தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகளை பணியாளர்கள் மேற்கொண்டனர்.
  இந்த ஆய்வின் போது மாநகராட்சி, நகராட்சி, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து