முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் 'ரா' உளவு அமைப்பு சிறிசேனாவை கொல்ல முயன்றதா - பிரதமர் மோடியிடம் அவரே அளித்த விளக்கம்

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இலங்கை அதிபர் சிறிசேனாவைக் கொலை செய்ய இந்தியாவின் உளவு அமைப்பான ரா திட்டமிட்டது என்று வெளியான செய்தி தொடர்பாகப் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா விளக்கம் அளித்தார்.

அப்போது, தன்னைக் கொல்வதற்கு இந்தியாவின் உளவு அமைப்பு 'ரா' சதித்திட்டம் தீட்டியிருந்தது என்ற செய்தி தவறானது, அடிப்படை ஆதாரமற்றது என்று பிரதமர் மோடியிடம் அதிபர் சிறிசேனா தெரிவித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசின் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அதிபர் சிறிசேனா பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார். அப்போது, தன்னைக் கொல்வதற்கு இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' திட்டமிட்டிருந்தது. ஆனால், இது பிரதமர் மோடிக்குத் தெரியாது என்று பகீர் குற்றச்சாட்டு வைத்தார் என்று தனியார் ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டது.

இது தொடர்பாக அந்த இணையதளத்துக்குப் பேட்டி அளித்த பெயர் வெளியிட விரும்பாத அமைச்சரும், இந்தியாவின் உளவு அமைப்பு அதிபர் மைத்திரிபால சிறிசேனாவைக் கொல்ல திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, தன்னைக் கொல்ல 'ரா' அமைப்பு சதி செய்ததாகத் தான் கூறியதாக வெளியான செய்தி குறித்து விளக்கம் அளித்தார். ஏறக்குறைய இருவரும் 20 நிமிடங்கள் வரை தொலைபேசியில் பேசி, பல்வேறு விஷயங்களைத் தெளிவுபடுத்தினார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கை அதிபரைக் கொல்ல இந்தியாவின் உளவு அமைப்பு 'ரா' சதித்திட்டம் தீட்டியிருந்ததாக எழுந்த செய்தியை இலங்கை அதிபர் சிறிசேனா திடமாக மறுத்துள்ளார். ஆதாரமில்லாத, விஷமத்தனமான, தவறான உள்நோக்கத்துடன் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையிலான சிறந்த நட்புறவில் விரிசலை ஏற்படுத்த வேண்டும், தவறான புரிதலை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று அதிபர் சிறிசேனா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து