முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டர் விடுவதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை: வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்புகிறார் மு.க. ஸ்டாலின் - தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகளை பட்டியலிட்டு முதல்வர் பேட்டி

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் : தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டு வேண்டுமென்றே அரசு மீது அவதூறு செய்தியை பரப்பி வருவதாகவும், டெண்டர் விடுவதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் தி.மு.க. ஆட்சிக் காலத்தின் போது நடந்த நெடுஞ்சாலை துறை முறைகேடுகளையும் அவர் பட்டியலிட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து எடப்பாடிக்கு செல்லும் வழியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:- 

கேள்வி:  தமிழகத்தில் இருந்த  முதலமைச்சர்களில் யார் மீதும் சி.பி.ஐ. விசாரணை நடந்ததில்லை, ஆனால் இப்பொழுது உங்கள் மீது தான் சி.பி.ஐ. விசாரணை நடக்கப் போகிறது என்று ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியிருக்கிறாரே?

பதில்:  உங்களுக்கு பலமுறை சொல்லி விட்டேன். அவர் பொய் பொய்யாய் சொல்லிக் கொண்டிருக்கிறார். எந்த குற்றச்சாட்டு என்று சொன்னால் பரவாயில்லை, இவர் எல்லா ஆயுதத்தையும் எடுத்துப் பார்த்து விட்டார். ஆட்சியை கலைக்கலாம் என்ற ஆயுதத்தை எடுத்தார், சட்டமன்றத்தில் கடுமையான அராஜகம் செய்தார். அதுமட்டுமல்ல, புனிதமாக மதிக்கக்கூடிய சட்டமன்றத்தில் சபாநாயகர் இருக்கையிலேயே, அவருடைய கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் அமர்ந்தார்கள், அந்தக் காட்சியையெல்லாம் தி.மு.க.வினர் அரங்கேற்றினார்கள்.  சட்டம் இயற்றும் மாமன்றத்திலேயே, அப்படி மிகப் பெரிய ரகளையில் ஈடுபட்டார்கள்.  அதற்குப் பிறகு, கட்சியை உடைக்கலாம் என்று நினைத்தார்கள், சிலபேரை தூண்டிவிட்டு எங்கள் கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினையை உருவாக்கப் பார்த்தார்கள், அதுவும் முடியவில்லை. இப்பொழுது இந்த ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள். டெண்டர் விடுவதில் என்ன தவறு இருக்கிறது என்றுதான் நான் கேட்கிறேன்.  ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவினாசி சாலை இந்த சாலைகளை என் உறவினருக்கு கொடுத்தாக குற்றச்சாட்டு கூறுகிறார்கள். உறவினர் என்று சொன்னால், 1968-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவராக இருந்து முதலமைச்சராக இருந்த கருணாநிதி காலத்திலேயே ஒரு வரைமுறை வகுக்கப்பட்டிருக்கின்றது.  யார் யாரெல்லாம் ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகள் என்று.
லாயக்கில்லை

அப்பா, அம்மா, அந்த துறையினுடைய அமைச்சர், அவருடைய மனைவி, மகன், மகள், அண்ணன், தம்பி, இப்படித்தான் ரத்த உறவு. நெருங்கிய உறவினர்கள் என்று பார்த்தால், அப்பா, அம்மா, அந்த துறையினுடைய அமைச்சர், அவருடைய மனைவி, மகன், மகள், மகளுடைய கணவர், மகனுடைய மனைவி, அந்த அமைச்சரின் மனைவியுடைய அப்பா, அம்மா, அப்பாவிற்கு இரண்டாம் தாரம் இருந்தால், அவருடைய மனைவி, அவருடைய மகன், மகள், அவர் யாரையாவது தத்தெடுத்து வளர்த்திருந்தால் அந்த பையன், பெண்.  இதுதான் நெருங்கிய உறவினர்கள்.   இதில் எதிலும் வரவில்லை.  அப்படியிருக்கும்பொழுது, சொந்தக்காரருக்கு கொடுத்தேன் என்ற சொன்னால், எப்படி, இதை பத்திரிகையாளர்கள் தான் விளக்க வேண்டும். நான் பலமுறை விளக்கி விட்டேன்.  ஆக ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கே தகுதியில்லாமல் இருக்கிறார்(ஸ்டாலின்).  ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் ஒரு தவறான செய்தியை நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறாரென்றால், எதிர்க்கட்சித் தலைவருக்கு அந்த பதவிக்கு அவர் லாயக்கில்லை என்றுதான் மக்கள் கருதுகிறார்கள். நானும் கருதுகிறேன்.  டெண்டர் விடுவதில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த டெண்டரைப் பொறுத்தவரைக்கும் ஆன்லைன் டெண்டர். இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தகுதியானவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.  இரண்டாவது, எல்லா டெண்டருக்கும் இ.எம்.டி. கட்டுவார்கள்.  இதற்கு முன்பெல்லாம் என்னவென்றால், இ.எம்.டி.-க்கு பேங்க் கேரண்டி கொடுத்தால் போதும், ஆனால் இந்தமுறை முதன்முதலாக ஆன்லைனிலேயே வழங்கப் போகிறார்கள் அந்த டெண்டர் போட்டவர்கள். அவருக்குத்தான் தெரியும், வேறு யாருக்குமே தெரியாது. அப்படி இருக்கும்பொழுது, இதில் எப்படி முறைகேடு நடக்க முடியும்?

அதே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2010-ல் இதே ராமலிங்கம் அண்டு கோ நிறுவனத்திற்கு குடிசை மாற்று வாரியத்தில்  சிங்கிள் டெண்டரில் பாக்ஸ் டெண்டரில் இவருக்கு 74 கோடி ரூபாய் டெண்டர் போட்டிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அவருடைய ஆட்சிகாலத்தில் இவர்களுக்கு 10 டெண்டர் கொடுத்திருக்கிறார்கள். ஆக, இவருக்கு தகுதியில்லை என்பதற்கு வழியே கிடையாது.  இரண்டாவது விலைப்புள்ளியில் அதிகமாக கொடுத்ததாக சொல்கிறார்கள். ஆர்.எஸ்.பாரதி ஒரு கிலோ மீட்டர் 4 வழிச்சாலை அமைப்பதற்கு 2 கோடியே 20 லட்சம்தான் ஆகும் என்று சொல்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மத்தியில் தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சராக டி.ஆர்.பாலு  இருந்தார். அப்பொழுது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. 2006-ல் சேலம்-குமாரபாளையம், பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே, ஒரு கிலோ மீட்டருக்கு 4 வழிச்சாலை அமைப்பதற்கு 8 கோடியே 78 லட்சத்திற்கு விட்டிருக்கிறார்கள். அப்பொழுது மத்தியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில்  தி.மு.க. ஆட்சி.

2006-ல் குமாரபாளையம்-செங்கம் சாலை, ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 7 கோடியே 83 லட்சம் செலவு செய்திருக்கிறார்கள். 2006-ம் ஆண்டு துவங்கப்பட்டு, 2009-ம் ஆண்டு முடிந்திருக்கிறது. அதே போல, சென்னை பைபாஸ் பேஸ் - 2 -ல் ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 12 கோடியே 42 லட்சம் செலவு செய்திருக்கிறார்கள். 2006-ல் ஆண்டு பாடலூர் - திருச்சி, ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 8 கோடியே 33 லட்சம் செலவு செய்திருக்கிறார்கள். 2006-ம் ஆண்டு அந்தப் பணி ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு பாண்டிச்சேரி - திண்டிவனம், 2008-ம் ஆண்டு ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 7 கோடியே 52 லட்சம் செலவு செய்திருக்கிறார்கள்.  இப்பொழுது கிட்டத்தட்ட 50 சதவீதம் விலை உயர்ந்திருக்கிறது. எப்படி முறைகேடு நடக்கும்? ஆர்.எஸ்.பாரதி 1515 கோடி இதற்காக ஒதுக்கி கொடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார்.  இது ஆனுவிட்டி டெண்டர், 10 ஆண்டுகள் காலம், இதில் முதல் இரண்டாண்டு காலம் சாலை அமைக்கின்ற பணி, மீதி எட்டு ஆண்டு காலம், சாலை அமைத்தபிறகு அந்த நிறுவனமே அந்த பராமரிப்பை செய்து பணியை மேற்கொள்ள வேண்டும்.  இதை 16 மாதமாக பிரித்து ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும், நிர்ணயிக்கப்பட்ட தொகை, வட்டி, பராமரிப்புத் தொகை எல்லாம் கொடுப்பார்கள். அதுதான் 1515 கோடி வரும்.  அதேபோலத்தான் 2009-ல் வண்டலூர் முதல் நெமிலிச்சேரி வரைக்கும்  தி.மு.க. ஆட்சியில் 1081 கோடிக்கு டெண்டர் விட்டார்கள். ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 36.45 கோடி ஆனுவிட்டி டெண்டர் விட்டிருக்கின்றார்கள், 35 தவணையாக, அதாவது, ஒரு தவணைக்கு ரூபாய் 62 கோடி 6 மாதத்திற்கு ஒரு தவணை கொடுப்பார்கள், 35 தவணையில் தரவேண்டும். அப்படி 35 தவணையில், அரசு ரூபாய் 2474.55 கோடி கொடுக்க வேண்டும். இந்த டெண்டரைப் பொறுத்தவரை, முதல் இரண்டு வருடத்தில் டெண்டரை முடிக்க வேண்டும். அப்புறம் டெண்டர் எடுத்தவருக்கு, 6 மாதத்திற்கு ஒரு முறை 16 முறை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும், நிர்ணயிக்கப்பட்டத் தொகை, அதற்கு வட்டி, மெயின்டனன்ஸ் சேர்த்துக் கொடுக்கும்பொழுது தான் இந்தத் தொகை வரும்.  இந்த டெண்டர் விடும்பொழுது மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்திலிருந்து தமிழ்நாட்டில் 7 சாலைகள் டெண்டர் விட்டார்கள். 

பட்டியல்

மடத்துக்குளம் - பொள்ளாச்சி சாலை ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 11 கோடி 21 லட்சம், ஒட்டன்சத்திரம் - மடத்துக்குளம் சாலை சாலை ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 13 கோடி 85 லட்சத்திற்கு விட்டார்கள். கல்லடம் - கருப்பூர் சாலை ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 14 கோடி 4 லட்சம், திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் சாலை ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 14 கோடி 74 லட்சம், திருச்சி -கல்லடம் சாலை ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 25 கோடி 62 லட்சம், சோழவரம் - தஞ்சாவூர் சாலை ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 26 கோடி 78 லட்சம், சேத்தியாத்தோப்பு - சோழவரம் சாலை ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 27 கோடி 40 லட்சம். ஆக, நாம் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10.16 கோடிக்குத்தான் விட்டிருக்கிறோம். இந்த டெண்டருக்கெல்லாம் எஸ்கலேசன் உண்டு. ஆனால் நாம் விட்ட டெண்டரில் எஸ்கலேசன் கிடையாது. டெண்டர் விட்டு இப்பொழுது ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் வேலையே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் ஊழல் என்கிறார்கள்.  இப்பொழுது அந்த நிறுவனம் 2 கோடி ரூபாய் டீசலுக்கு மட்டும் செலவழிக்கின்றது.  அப்பொழுது, போடும் போது 58 ரூபாய். இன்றைக்கு 80 ரூபாய், டீசலில் மட்டும் அவருக்கு 44 கோடி ரூபாய் நஷ்டம். இரண்டாவது, அந்த கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டது.  ஸ்டீல் ஒரு டன் 12000 ரூபாயாக இருக்கிறது. இதன் மூலம் 73 கோடி ரூபாய் நஷ்டம். இதே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் டெண்டர் விட்டிருக்கிறார்களே, அதில் எந்த நஷ்டமும் கிடையாது. ஆக, அரசு யாருக்கும் சலுகை காட்டவில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.  இதற்குமேல் அவர் சொல்லிக் கொண்டிருந்தால், எதிர்க்கட்சி வரிசையில் அவர் அமர்வதற்கு லாயக்கில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்வதற்கே தகுதியில்லை.

கேள்வி: இந்த வழக்கை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கு என்ன காரணம்?

பதில்: அவர் என்ன சொல்லியிருக்கிறார். உங்களுக்கு எல்லாம் தெரியும். இந்நேரம் நெட்டில் போட்டு எடுத்திருப்பீர்கள்.  பதில் என்ன சொல்லியிருக்கிறார்.  நியாயமாக, நேர்மையாக நடக்க வேண்டும். அதற்காக சி.பி.ஐ.க்கு ஆரம்ப கட்ட விசாரணை தான் சொல்லியிருக்கிறார்கள். எதிலும் அதை சொல்லவில்லையே. ஆக, வேண்டுமென்றே திட்டமிட்டு, அவதூறு செய்தியை பரப்பிக் கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். ஆக, யார் விசாரித்தாலும் இது ரிகார்டு. யாரும் இதை மாற்ற முடியாது. இது உலக வங்கி சட்டதிட்டத்திற்கு உட்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருக்கும் போதும், இதே நிலையில் பார்த்தீர்களானால், உலக வங்கி நடைமுறையைத் தான் பின்பற்றி டெண்டர் கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது அம்மாவுடைய அரசும் இதே நிலையை பின்பற்றி தான், டெண்டர் கொடுத்திருக்கிறது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஸ்டாலின் பள்ளிக்கூடத்து பிள்ளை போல நாங்க கேஸ் போட்டால் அவரும் கேஸ் போடுவேன் என்று சொல்கிறார். தவறு. ஏனென்றால் அந்த டி.என்.ஆர்.எஸ்.பி, தி.மு.க ஆட்சி காலத்தில் நான்கு டெண்டர்கள் விட்டார்கள். இதையெல்லாம், கோப்புகள் எடுத்து  பார்க்கும் போதும் தான் தெரிந்தது, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே விடப்பட்ட டெண்டர்களின் முறைகேடுகள், அப்பொழுதுதான் தெரிவிக்கப்பட்டது. இதையும் நீங்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கடமையில் நான் தெரிவிக்கின்றேன்.

2008-ல் வேலை முடித்திருக்கிறார்கள். ஆற்காடு - உழுந்தூர்பேட்டை  - போளூர் - செங்கம் - விருத்தாலம் - திருவாரூர் - ஜெயங்கொண்டம் - அரியலூர் மற்றும் புதிய புறவழிச்சாலை மற்றும் சிதம்பரம் - சீர்காழி – ஆரணி - போளூர் - திருவண்ணாமலை – திருக்கோவிலூர் - விருத்தாசலம் - அரியலூர் மற்றும் திருவாரூர் சாலைகளை மேம்படுத்துதல். இந்த டெண்டர் வந்து, ஒப்பந்தம் விட்ட மதிப்பு 611.70 கோடி ரூபாய். இதில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். செய்யச் செய்ய கிட்டத்தட்ட 161.67 கோடி ரூபாய் அதிகமாக கொடுக்கிறார்கள். வேலை செய்து கொண்டிருக்கிறார்கள், செய்யச் செய்ய ஒவ்வொரு வேலைக்கும் சேர்த்து சேர்த்துபணத்தை கொடுத்து 161.67 கோடி ரூபாய், சதவிகிதத்தை பார்தீர்களானால், 26.43 சதவீதம்  அதிகமாக பணம் கொடுத்திருக்கிறார்கள். அதை தான் தோண்ட தோண்ட வந்து கொண்டிருக்கிறது என்று பேட்டியில் சொன்னேன்.  இதற்கு எல்லாம் அவர் பதிலே சொல்லவில்லை. இப்போது நான் இந்த ஊடகத்தின் வாயிலாக சொல்கிறேன். இதை என்ன வென்று அவர் சொல்லபோகிறார் என்று தெரியவில்லை. தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற சம்பவம். தி.மு.க ஆட்சியிலே இந்த டி.என்.ஆர்.எஸ்.பி இதே திட்டத்தின் வாயிலாக ஒப்பந்தம் கோரப்பட்டு அந்த ஒப்பந்தத்தின் விவரங்களை நான் இங்கே சொல்லி கொண்டு இருக்கிறேன்.

2006-ல் ஒரு டெண்டர் விடுகிறார்கள். நாகப்பட்டினம் முதல் கட்டுமாவடி வரை உள்ள சாலையை மேம்படுத்துதல். இதிலே அசல் ஒப்பந்த மதிப்பு 198.77 கோடி ரூபாய். இதற்கு கூடுதலாக 72.49 கோடி ரூபாய் கொடுக்கிறார்கள். வேலை செய்யச் செய்ய கொடுக்கிறார்கள். டெண்டரில் எபவ் போடவில்லை. இதற்கு 36.4 சதவிகிதம் அதிகமாக கொடுத்திருக்கிறார்கள்.

இரண்டாவது அசல் ஒப்பந்தம் 143.41 கோடி ரூபாய். இதிலே கூடுதலாக கொடுத்தது 111.39 கோடி ரூபாய். எந்த எஸ்கலேசன் இவ்வளவு விலை ஆகாது. 2006லிருந்து 2008 வரைக்கும் எவ்வளவு விலை உயரப் போகுது. 143.41 கோடி ரூபாய் வேலையின் பெயர் இராமநாதபுரம் முதல் கட்டுமாவடி வரை உள்ள சாலைகளை மேம்படுத்துதல். இதிலே வந்து பார்த்தீர்களானால் 77.67 சதவிகிதம் அதிகமாக கொடுத்திருக்கிறார்கள்.

அதே போல, 2007, 2008 மற்றும் 2009 வரைக்கும், 3 வருடங்கள் செய்திருக்கிறார்கள். இராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை உள்ள சாலைகளை மேம்படுத்துதல். இந்த ஒப்பந்த மதிப்பு 119.26 கோடி ரூபாய். இதுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட தொகை 84.72 கோடி ரூபாய். இதிலே உள்ள அதிக மதிப்பீடு 71.04.  இது எல்லாம் பாஸ்ட் டெண்டர். நாங்க விட்டது ஆன்லைன் டெண்டர். பணம் கட்டுவது கூட யாருக்கும் தெரியாது. இதுதான் முதல்முறை. தமிழ்நாட்டில் ஆன்லைனில் பணம் கட்டுவது. அப்போது டெண்டர் போடுவது தான் தெரியும். ஆக பாஸ்வேர்டில் என்றைக்கு ஒப்பன் செய்கிறார்களோ, அன்றைக்கும் தான் யார் டெண்டர் போட்டார்கள், எந்த ரெட்டில் போட்டார்கள் என்பது முழுவதுமாக தெரியும். அதில் எப்படி முறைகேடு நடக்கும். 

ஆக, வேண்டுமென்றே, அரசின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக, விரக்தியின் விளிம்பில் தி.மு.க. தலைவர், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் போய் விட்டார். அவர் பல ஆயுதத்தை தூக்கிப் பார்த்தார். எதுவும் முடங்கவில்லை. இந்த ஆயுதத்தை தூக்கி தான் இப்போ புறப்பட்டு இருக்கிறார். அதில் நிச்சயம் வெற்றி காண முடியாது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து