முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் சொத்துக்களை சூறையாடியவர் ,அரைவேக்காட்டு அறிக்கைகாரர் டி.ஆர்.பாலு அமைச்சர் தங்கமணி கடும் தாக்கு

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தான் பிறந்த சொந்த மாவட்டத்தின் வளங்களையும், இந்திய தேசத்தின் சொத்துக்களையும் சூறையாடியவர், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் பற்றி ஆப்பிள், பேரிக்காய் என்று அரைவேக்காட்டுத்தனமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் டி.ஆர். பாலு என்று தங்கமணி காட்டமாக தாக்கியுள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மின்துறை அமைச்சருமான தங்கமணி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
சொந்த கட்சித் தொண்டர்களுக்கே ரத்தக் கண்ணீர் வரக்கூடிய வகையில் சுயநல அரசியல் செய்பவர் என்று 2012-ம் ஆண்டே தனது தலைவரால் சபிக்கப்பட்ட டி.ஆர்.பாலு கனிகளுக்கிடையே வேறுபாடுகளைக் கண்டறியும் வித்தையை கரைத்துக் குடித்தவர் போலிருக்கிறதே ! என்று நினைக்கத் தோன்றும் வகையில் ஆப்பிள், பேரிக்காய் என்றெல்லாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அரைவேக்காட்டு அறிக்கையை...ஊழல் மகா சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுத்த டி.ஆர்,. பாலு, மக்களை “ஞான சூனியமாக்கும்” முயற்சியில் இறங்கி, தேசிய-மாநில நெடுஞ்சாலைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். “தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது மட்டுமே மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் பணி என்றும், சாலைப் பணிகளை செயல்படுத்துவது, டெண்டர் விடுவது, டெண்டர்களை முடிவு செய்வது எல்லாம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பணி என்றும்” தனது அறிக்கையில் கூறியிருக்கும் டி.ஆர்.பாலுவுக்கு, மாநில நெடுஞ்சாலைப் பணிகளை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகள் தெரியாமல் போனதால் ஆப்பிள், பேரிக்காய் என்று அரைவேக்காட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

விளக்க வேண்டிய சூழ்நிலை...குழப்பத்தில் இருக்கும் டி.ஆர்.பாலு, தெளிவு பெறுவதற்காக மாநில நெடுஞ்சாலைப் பணிகளைப் பற்றி விளக்க வேண்டி இருக்கிறது. தமிழ் நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு பணி மேற்கொள்ளப்படுவதை நடைமுறைப்படுத்த, மூத்த அதிகாரிகளைக் கொண்ட மதிப்பீட்டுக்குழு, நிலைக்குழு ஆகிய இரண்டு கமிட்டிகள் உள்ளன. அவை, நிதித் துறை துணைச் செயலரும், திட்ட இயக்குநரும், உறுப்பினர்களாக உள்ள மதிப்பீட்டு குழு முதலில் தொழிற்நுட்பத்தை அம்சங்களை சரிபார்க்கிறது. அதன் பிறகு நிதி குறித்த அம்சங்கள் சரிபார்க்கப்படுகிறது. பின்னர் மதிப்பீட்டுக்குழுவில் இருந்து ஒப்பந்தங்கள் நிலைக்குழுவுக்கு அனுப்பப்படுகின்றன.

ஒப்பந்ததாரருக்கு டெண்டர்...நிதித் துறை செயலர், நெடுஞ்சாலைத் துறை செயலர், திட்ட இயக்குநர், கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் முதன்மைப் பொறியாளர் ஆகியோர் கொண்ட மதிப்பீட்டுக்குழு ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கும் ஒப்பந்தத்தின் விவரங்களை ஆய்வு செய்து, அது சரியாக இருப்பின், உலக வங்கியின் பரிசீலனைக்கு அனுப்புகிறது. உலக வங்கி அந்த ஆவணங்களை சரிபார்த்து, ஏற்புடையதாக இருந்தால், அந்த ஒப்பந்ததாரருக்கு டெண்டர் வழங்கப்படுகிறது. இது, தி.மு.க. ஆட்சி நடைபெற்ற நேரத்திலும் நடைமுறையில் இருந்தது. இப்போதும் நடைமுறையில் உள்ளது.

முதல்வருக்கு தொடர்பு கிடையாது...தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஒப்பந்த விண்ணப்பங்களை பெட்டியில் போடும் திட்டம், நடைமுறையில் இருந்தது. தற்பொழுது, அரசில், டெண்டர் முறையில் எந்தவித ஊழல் முறைகேட்டுக்கும் வழியில்லாத வகையில் டெண்டர் பணிகள் நடைபெறுகின்றன. தமிழ் நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையிலும், மூத்த அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட இரண்டு குழுக்கள்தான் டெண்டர்களை முடிவு செய்கின்றனவே தவிர, இதில் துறையின் அமைச்சருக்கும், தற்போது துறையின் அமைச்சராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. டெண்டர் தொடர்புடைய கோப்புகள், துறையின் அமைச்சருக்கு வராத போது, சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு எப்படி கூறமுடியும்?
தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்று முதல்வர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சொல்கிறாரே! என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் டி.ஆர் . பாலு. அது குறித்த கேள்வியை பாலுவுக்கு மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முடிச்சு போடுவது ஏன்?முதலமைச்சர் மீது ஊழல் கண்காணிப்புத் துறையிடம் புகார் கொடுத்த பின், தி.மு.க-வின் ஆர்.எஸ். பாரதி, ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசி வழித்தடத்தில் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூ. 2.20 கோடிதான் செலவாகும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்படியானால் 12 ஆண்டுகளுக்கு முன், 2006-ம் ஆண்டு,டி.ஆர். பாலு மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, சேலம் - குமாரபாளையம் நான்கு வழிச் சாலை, ஒரு கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்கு ரூ. 8.78 கோடி செலவாகியது எப்படி ? மற்றும் குமாரபாளையம் - செங்கப்பள்ளி சாலை அமைக்க 1 கி.மீ.க்கு ரூ.7.83 கோடி செலவாகியது எப்படி? என்று தான் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கு டி.ஆர். பாலு நேரடியாக பதில் அளிக்காமல் ஆப்பிளுக்கும், பேரிக்காய்க்கும் முடிச்சு போடுவது ஏன்? இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து