முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் தகுதி காரணமாகவே இந்திய அணியில் ஜாதவை சேர்க்கவில்லை தேர்வுக் குழு பதில்

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி,தன்னை அணியில் சேர்க்காதது ஏன் என்று தெரியவில்லை என்று கூறிய கேதர் ஜாதவுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழு பதில் அளித்துள்ளது.

சுற்றுப்பயணம்...வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது.முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி, விசாகப் பட்டினத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோலி சில சாதனைகளை செய்தாலும் போட்டி, யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சமனில் முடிந்தது.

கேதர் ஜாதவ் இல்லை....இரு அணிகளுக்கு இடையிலான மீதமுள்ள மூன்று போட்டிகள், முறையே புனே, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடக்கிறது.  கடைசி மூன்று ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். முதல் இரு ஆட்டங்களில் ரன்களை வாரி வழங்கிய முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு, தியோதர் கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடிய கேதர் ஜாதவ் அணியில் இடம்பெறவில்லை. 2-வது போட்டியில், இந்திய ஏ அணிக்காக விளையாடிய அவர், சி அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி, 25 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

ரஞ்சிப் போட்டியில்....இந்திய அணியில் இடம்பெறாதது பற்றி கேதர் ஜாதவ் கூறும்போது, ‘வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி 3 போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், எதற்காக என்னை அணியில் சேர்க்கவில்லை என்று தெரியவில்லை. அனைத்துவித உடல் தகுதியிலும் தேர்வு பெற்றுதான் தியோதர் போட்டியில் ஆடுகிறேன். காயத்தில் இருந்து மீண்டுவிட்டேன். உடல் தகுதி சரியாகவே இருக்கிறது. இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றால் ரஞ்சிப் போட்டியில் கவனம் செலுத்துவேன்’ என்றார்.

காயம் காரணமாக...உடல் தகுதியில் தேர்வு பெற்ற ஜாதவை, இந்திய கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை இந்திய ஏ அணியில் இணையுமாறு கூறியது. இதையடுத்து அந்த அணியில் இணைந்த அவர் தியோதர் டிராபியில் ஆடினார். அவர் தேசிய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடம் பெறவில்லை.  இதுபற்றி தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறும்போது, ‘அவர் உடல் தகுதி காரணமாகவே அவர் இந்த தொடரில் சேர்க்கப் படவில்லை. அவர் அணிக்குத் திரும்பும் போதெல்லாம் காயம் காரணமாக வெளியேறுகிறார். ஆசிய கோப்பை தொடரில் இணைந்த அவர் காயத்தால் அவதிப்பட்டார். அவர் உடல் தகுதியை சோதிக்க, போதுமான போட்டிகளில் அவர் ஆட வேண்டும். தியோதர் கோப்பை தொடரில் இன்னும் சில போட்டிகளில் ஆடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் பங்கேற்ற அணி தோல்வி அடைந்ததால், அவர் இறுதி போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து