முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. வங்கிகளை வலுவிழக்க செய்துவிட்டது பா.ஜ.க. அரசு அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 27 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,சி.பி.ஐ. மற்றும் வங்கிகள் உள்ளிட்ட அரசு அமைப்புகளை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு வலுவிழக்கச் செய்துவிட்டது என்று சமாஜவாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம்   கூறியதாவது:பாஜக தலைமையிலான மத்திய அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக வங்கிகளை சீர்குலைத்தது. அரசியல் காரணங்களுக்காக பல்வேறு அரசுகளால் தவறாகப் பயன்படுத்தப்படும் சி.பி.ஐ. அமைப்பும், தற்போது பா.ஜ.க அரசால் அதே நிலையை சந்தித்துள்ளது. சி.பி.ஐ. அமைப்பை தடம் பிறழச் செய்ததன் மூலமாக, அந்த அமைப்பு அதிகாரிகளுக்குள்ளாகவே மோதல் எழும் நிலையை பா.ஜ.க. ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அதுதொடர்பாக மேற்கொண்டு கருத்து கூற விரும்பவில்லை. ஏனெனில், பா.ஜ.க.வே தற்போது அந்த விவகாரத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது.பா.ஜ.க., சி.பி.ஐ.  மூலமாக பல்வேறு வழக்குகளில் என்னை சிக்க வைக்க முயற்சித்தது. கடந்த காலங்களில் அதுபோன்ற விசாரணைகளை நான் எதிர்கொண்டேன். ஆனால், தற்போது சி.பி.ஐ.  அமைப்பில் வெளிவந்துள்ள சச்சரவு மூலமாக அந்த விசாரணைகளின் தன்மை குறித்து தெளிவடைந்துள்ளேன்.பா.ஜ.க.வின் தற்போதைய ஆட்சியில் சுமார் 40,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்ற பா.ஜ.க.வின் வாக்குறுதி, இன்னும் கனவாகவே நீடிக்கிறது.

எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலில் இளைஞர்களே வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பார்கள். உத்தரப் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியலில் பா.ஜ.க. முறைகேடுகளில் ஈடுபடுகிறதா என விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள் நிச்சயம் சமாஜவாடி கட்சிக்கு ஆதரவளிப்பார்கள். அதன்மூலம் பா.ஜ.க.வுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கோட்வானா கன்தந்த்ர கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறோம். அதேவேளையில், பகுஜன் சமாஜ் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான மாபெரும் கூட்டணி குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து