முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷாவின் முயற்சியை கேரள மக்கள் முழுமூச்சுடன் எதிர்ப்பார்கள்: பினராயி விஜயன்

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரள மாநில இடதுசாரி அரசை சீர்குலைக்க பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா முயற்சி செய்து வருகிறார் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, கேரளத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தியது தொடர்பாக இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் கேரளத்துக்குப் பயணம் மேற்கொண்ட அமித்ஷா, இது தொடர்பாக மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். அப்போது அவர், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐயப்ப பக்தர்களை போலீஸார் ஒடுக்கி வருகின்றனர். இந்த விவகாரத்தில், கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி காவல் துறையைப் பயன்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் உள்பட சுமார் 3,000 பக்தர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பக்தர்களை ஒடுக்குவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துகிறேன் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபடும் பக்தர்கள் மீது வன்மத்தை காட்டக் கூடாது. ஹிந்து பாரம்பரியத்தையும், சபரிமலை கோயிலின் புகழையும் கேரள அரசு அழிக்க நினைக்கிறது. அதை ஒருபோதும் பா.ஜ.க அனுமதிக்காது. பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்ந்தால், பினராயி விஜயன் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த அரசை ஆட்சியைவிட்டு அகற்றவும் பா.ஜ.க தயங்காது என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், கொச்சியில் நடைபெற்ற ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் பொதுக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:

கேரளத்தில் அமைதியை சீர்குலைத்து ஆதாயம் அடைய பா.ஜ.க நினைக்கிறது. இது அமித் ஷாவின் பேச்சில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஆனால், கேரள மண் அதற்கு இடம்கொடுக்காது. அவர்களின் முயற்சிகள் தோல்வியடையும் என்பதை பா.ஜ.க வினர் அறிந்து கொள்ளவில்லை. அவர்களது முயற்சிகளுக்கு கேரள மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள். அமித்ஷா மற்றும் சங்கப் பரிவாரங்களின் முயற்சியை கேரள மக்கள் முழுமூச்சுடன் எதிர்ப்பார்கள்.

கேரள மாநில இடதுசாரி அரசு மக்களால் உருவாக்கப்பட்ட அரசு. அதனை எப்படியாவது சீர்குலைத்துவிட வேண்டும் என்று அமித்ஷா திட்டமிட்டு வருகிறார். ஆனால், மாநில மக்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து அதனை அமல்படுத்த வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் அரசு அதைத்தான் செய்து வருகிறது. மாநிலத்தின் அமைதியைச் சீர்குலைக்க யார் முயற்சித்தாலும் அதனை அனுமதிக்க மாட்டோம் என்றார் பினராயி விஜயன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து