முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரும்பு மனிதர் படேல் சிலையின் சிறப்பம்சங்கள்

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில் சிலைகள் அமைப்பது புதிய பரிணாமத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி கடல் நடுவே திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டுள்ளது. இது போல மேலும் பல சிலைகள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு தமிழகத்தில் ஆங்காங்கே உள்ளன.

உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து கொண்டிருக்கும் சிலைகளில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடலில் அமைக்கப்பட்டிருக்கும் சுதந்திரதேவி சிலை தனி சிறப்பு பெற்றது. இந்த சிலையின் உயரம் 305 அடி. இந்த சிலையின் மற்றொரு சிறப்பு, சிலைக்கு உள்ளே நாம் சென்று அதன் உச்சியை அடையலாம். அங்கிருந்தபடி நியூயார்க் நகரின் அழகை ரசிக்க முடியும். இதனால் இந்த சிலை சுற்றுலாவாசிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

சீனாவில் ஸ்பிரிங் டெம்பிள் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மாண்டமான புத்தர் சிலையின் உயரம் 419 அடி. இப்போதைக்கு உலகின் மிக உயரமான சிலை இதுதான். அந்த சாதனையை முறியடிக்க இந்தியாவில் அதை விட மிக உயரமான சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சிலைதான் சர்தார் வல்லபாய் படேல் சிலை. 

இந்திய சுதந்திர போராட்டத்திலும், சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சியிலும் அதிக பங்காற்றி இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் கடந்த 1875-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி குஜராத் மாநிலம் சூரத் நகர் அருகே ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். காந்தி நடத்திய சுதந்திர போராட்டங்களில் எல்லாம் பங்கேற்ற படேல், இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நேரு அமைச்சரவையில் துணை பிரதமரானார். முக்கியமான உள்துறை இலாகா அவரிடம் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு படேல் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து சுதேச சமஸ்தானங்கள் அனைத்தையும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார். அதன் மூலம் இரும்பு மனிதர் என அழியாப் புகழ் பெற்றார். 1950, டிசம்பர் 15-ம் தேதி காலமான படேலுக்கு 1991-ல் பாரத ரத்னா விருதை படேலுக்கு அப்போதைய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் வழங்கினார். படேலின் பேரன் விபின் தாயாபாய் படேல் ஜனாதிபதியிடம் இருந்து அந்த விருதை பெற்றுக் கொண்டார்.

இவ்வளவு புகழ் பெற்ற சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கட்டு அருகே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. படேல் சிலை அமைப்பதற்கு தேவையான இரும்பு பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டது. இதன் மூலம் 5 ஆயிரம் டன் இரும்பு கிடைத்தது. படேல் சிலை மற்றும் அதனை  சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுமான பணிகளுக்கு இரும்புதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று என்று போற்றப்படும் இந்த சிலை  படேலின் பிறந்த நாளான நேற்று திறக்கப்பட்டது.

சிலையின் சிறப்புகள்:-

* படேல் சிலையின் மொத்த உயரம் 787 அடி. பீடத்தின் உயரம் 190 அடி. கால் பகுதியில் இருந்து தலைப் பகுதி வரை உள்ள சிலையின் உயரம் மட்டும் 597 அடி.
* சிலை தயாரிப்புக்கு 70 ஆயிரம் டன் சிமிண்ட், 18,500 டன் இரும்பு, 1,700 டன் பித்தளை பயன்படுத்தப்பட்டுள்ளது.
* சிலையில் உட்பகுதியில் லிப்ட் செல்லக் கூடிய வகையில் காங்கிரீட் கலைவையிலான கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. சிலையின் வெளிப்பகுதி பித்தளை தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பித்தளை தகடுகள் மட்டும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை.
* சிலை கட்டுமான பணியில் ஈடுபட்ட 4 ஆயிரம் ஊழியர்கள், 300 என்ஜீனியர்களில் பலர் சீனாவை சேர்ந்தவர்கள்.
* சிலை அமைந்துள்ள சாதுபெட் தீவுக்கு செல்வதற்காக கெவடியா நகரில் இருந்து 3.5 கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது. 5 கி.மீ தூர படகு பயணம் செய்து சிலை இருக்கும் இடத்தை அடையலாம்.
* சிலையின் உட்பகுதி வழியாக மேலே செல்ல 2 லிப்டுகள் உள்ளன. இதில் ஒரே சமயத்தில் தலா 40 பேர் செல்லலாம்.
 * சிலையின் மார்பு பகுதியில் அதாவது 501 அடி உயரத்தில் 200 பேர் நின்று அங்கு இருந்தபடி இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க பார்வையாளர் மாடம் உள்ளது.
* 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சிலையின் அடித்தளத்தில் 52 அறைகள் கொண்ட 3 நட்சத்திர ஓட்டல் மற்றும் கண்காட்சி அரங்கம், நினைவு பூங்கா, மியூசியம், உணவுக் கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
* சிலையை சுற்றிக் காண்பிக்க 100 வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* 220 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றையும், 6.5 ரிக்டர் அளவிலான பூமி அதிர்ச்சியையும் தாங்கக் கூடிய வகையில் சிலை உறுதியாக செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து