முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் உயரமான படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : உலகிலேயே மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

இந்தியாவின் பிஸ்மார்க் என அழைக்கப்பட்ட வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கு அருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, சீனாவின் புத்தர் சிலையை விடவும் உயரமானது.

குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது, கடந்த 2013-ம் ஆண்டு இந்த சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. சிலையை அமைப்பதில் விவசாயிகளின் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் உள்ள 7 லட்சம் கிராமங்களில் இருந்து விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் இரும்புக் கருவிகளை விவசாயிகளிடம் இருந்து பெற்று அவை உருக்கப்பட்டு சிலையை வடிவமைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒற்றுமை சிலை என அழைக்கப்படும் இந்த சிலையைச் சுற்றி 20,000 சதுர மீட்டர் பரப்பில் செயற்கை ஏரியும் அமைக்கப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணி முடிந்த நிலையில், வல்லபாய் படேலின் பிறந்த தினமான நேற்று பிரதமர் மோடி படேலின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்த நாள் இந்திய வரலாற்றில் நினைவுகூரப்படும் நாளாக இருக்கும். எந்த இந்தியரும் இந்நாளை மறக்க மாட்டார்கள். இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவுக்கு சர்தார் வல்லபாய் படேலே காரணம். சுதந்திரத்துக்குப் பிறகு அவர் மேற்கொண்ட முயற்சிகளால்தான், இன்றைய இந்தியா உருவானது. படேலின் பாதையைப் பின்பற்றி, இந்தியா மிகப்பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக இந்தியா மாறி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து