முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரவைக் கூட்டத்தை வீட்டில் நடத்திய பாரிக்கர்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பனாஜி, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், பனாஜியில் உள்ள தனது இல்லத்தில் மாநில அமைச்சரவைக் கூட்டத்தை  நடத்தினார். இதன் மூலம் சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு கோவா மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
முன்னதாக, தனது வீட்டில் மாநில முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஆலோசனைக் கூட்டதை பாரிக்கர் நடத்தினார்.

உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரிக்கர், அண்மையில் வீடு திரும்பினார். இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தை அவர் நடத்தியுள்ளார்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அமைச்சர் விஜய் சர்தேசாய், பாரிக்கர் முழு உடல் நலத்துடன் உள்ளார். அவர் அமைச்சர்களுடன் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெறவில்லையே தவிர, மற்ற அனைத்து விதத்திலும் இக்கூட்டம் திருப்திகரமாக இருந்தது. சுரங்கத் தொழிலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை நீட்டிப்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

முதல்வருக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது என்பதால் மட்டுமே அவரது வீட்டில் கூட்டம் நடத்தப்பட்டது. அமைச்சர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் தனித்தனியாக உரையாடினார். தொடர்ந்து கட்சியினரை தனது வீட்டில் வைத்து  அவர் சந்திக்க இருக்கிறார் என்றார்.

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாரிக்கர், அமெரிக்காவுக்குச் சென்று உயர் சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பாரிக்கரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து