முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சென்னை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ரூ.1 கோடியில் வரவேற்பு இல்லக் கட்டிடம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை, ராயபுரத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் துயிற்கூடங்கள், கழிவறைகள், குளியலறைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள வரவேற்பு இல்லக் கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

வரவேற்பு இல்லம்

சென்னை, ராயபுரத்தில் செயல்பட்டு வரும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தற்காலிக இல்ல பராமரிப்பு தேவைப்படும் சிறுவர்களுக்காக வரவேற்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இவ்வரவேற்பு இல்லத்தில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள், பள்ளிக்குச் செல்லாமல் கடற்கரை, ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் சுற்றித் திரியும் சிறுவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்படும் சிறுவர்கள் போன்றவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர்.

அரசு அறிவிப்பு

2016-17-ம் ஆண்டு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை மானியக் கோரிக்கையில், சென்னை, ராயபுரத்தில் செயல்படும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான வரவேற்பு இல்லக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், புதிய கட்டிடம் கட்டப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, ராயபுரத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், துயிற்கூடங்கள், கழிவறைகள், குளியலறைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புனரமைத்து கட்டப்பட்டுள்ள வரவேற்பு இல்லக் கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

முதல்வர் அடிக்கல்

13.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், மதுரையில், மாநகராட்சி கட்டிடத்தில் இயங்கி வரும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகக் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும், தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, மதுரையில் உள்ள அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடம் மற்றும் தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு 3 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடம் ஆகியவற்றிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து