முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசுகளை கையாளுவதில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்: தேனி கலெக்டர்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      தேனி
Image Unavailable

தேனி,-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,  தலைமையில் பட்டாசுகளை கையாளுவதிலும், அதை கடைகளில் சேமிப்பு வைப்பதிலும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:-
பொதுமக்கள் பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசினை குறைப்பதற்காக இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை கடைபிடித்திட வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், புனித தலங்கள் மற்றும் குடிசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களின் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது. அதிக ஒலி, ஒளி, புகை வரக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாத்திரங்களில் பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக அருகில் பாத்திரங்களில் தண்ணீர்,மணல் ஆகியவற்றைத் தயாராக  வைத்திருக்க வேண்டும். சிறுவர், சிறுமிகளை பெரியவர்களின் துணையில்லாமல் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது. திறந்த வெளிகளில் பட்டாசு வெடிக்க வேண்டும். கவனமாக பட்டாசு வெடித்து தீபாவளியினை மகிழ்ச்சியாக கொண்டாடிட வேண்டும்.
 மேலும்,  பட்டாசு விற்பனையாளர்கள் பட்டாசுகள் விற்பதற்கு உரிமம் பெற்ற வளாகத்திலேயே விற்பனை செய்திட வேண்டும். பட்டாசுக் கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட எடை அளவிற்கு மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். ஒரு சமயத்தில் ஒரு இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பட்டாசு பண்டல்களை இறக்குவதையோ ஏற்றுவதையோ செய்வதை தவிர்க்க வேண்டும். பட்டாசு பண்டல்களை இறக்கும் போதும் ஏற்றும் போதும் கவனமாக கையாள வேண்டும். அந்த பணி செய்பவர்கள் மது அருந்தவோ, புகை பிடிக்கவோ கூடாது. பட்டாசுகளின் ஆபத்தான தன்மை விற்பனையாளர்கள் மற்றும் பணியாட்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு பட்டாசு பாக்கெட்டுகள் மற்றும் பெட்டிகளைக் கையாள்வது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். பண்டல்களை (சரக்குகளை) வண்டியில் இருந்து இறக்கும் போதும் ஏற்றும் போதும் “உஷார்-கவனம்” போன்ற பலகையோ பேனரோ பதாகைகளையோ வைத்து எச்சரிக்க வேண்டும். சிகரெட், பீடி, தீப்பெட்டி போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டாசுக் கடைகளில் இருக்கவோ விற்பனை செய்யப்படவோ கூடாது. ‘புகை பிடிக்க கூடாது” மற்றும்  ‘கடைக்கு அருகிலோ, எதிரிலோ பட்டாசு வெடிக்க கூடாது” என்பன போன்ற எச்சரிக்கை பதாகைகளை வைக்க வேண்டும். கடைகளின் முன்னால் தற்காலிக கூடாரம், தளம்  அமைத்து பட்டாசுகள் விற்பனை செய்யக் கூடாது.  கலர் மத்தாப்பு மற்றும்; வெடிகளை தனித்தனியாக சேமித்து, அடுக்க வேண்டும். கடையினுள் பட்டாசுகளை சுலபமாக கையாளும் வகையில் பட்டாசுகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மிக நெருக்கமாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடையினுள் புகை வரக்கூடிய மற்றும் மெழுகுவர்த்திகள், விளக்குகள், லாந்தர் விளக்குகள் போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது. கடையிலோ, கடைக்கு அருகிலோ மெழுகுவர்த்தி மற்றும் விளக்கு, மின்சார சாதனம் கொண்டு “சீலிங்” செய்வதை தவிர்க்க வேண்டும்.   அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி பாதுகாப்பான தீபாவளி பண்டிகையினை உருவாக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், உத்தமபாளையம் சார் ஆட்சியர்  .வைத்தியலிங்கம்,    பட்டாசுக்கடை விற்பனையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து