முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் அடங்கல் பெற சிறப்பு முகாம்கள் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் உத்தரவு

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- பயிர்காப்பீடு திட்டத்தில் சேர ஏதுவாக விவசாயிகள் அடங்கல் பெற சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கொ.வீர ராகவ ராவ்  தலைமையில், பாரதப்பிரதமர் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் 2018-2019-ஆம் ஆண்டிற்கு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர்காப்பீடு செய்திட ஏதுவாக உரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-விவசாயிகள் நலனை பாதுகாத்திடும் வகையில் பாரதப்பிரதமர் பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் புயல், வெள்ளம், வறட்சி போன்ற சூழ்;நிலை காரணமாக விவசாயிகள் பயிர்விதைப்பு பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை, பயிர்பாதிப்பு, பயிர் அறுவடைக் காலங்களில் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட நேர்வுகளில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் பயிர் பாதிப்பு குறித்து கணக்கிடப்பட்டு பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகை ராமநாதபுரம்; மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2016-2017-ம் ஆண்டில் 1,28,669 விவசாயிகளும், 2017-2018-ம் ஆண்டில் 1,50,514 விவசாயிகளும் பயிர்க்காப்பீடு செய்துள்ளனர். அந்த வகையில் 2018-2019-ம் ஆண்டிற்கு மாவட்டத்தில் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ், விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
  விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயிர்க்காப்பீடு செய்வதற்கு மூவிதழ் அடங்கல்  அவசியமாகும்.  எனவே விவசாயிகள் தங்களுக்கான மூவிதழ் அடங்கலை சிரமமின்றி பெற்றிட ஏதுவாக வருகின்ற 07.11.2018 அன்று முதல் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மூவிதழ் அடங்கல் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்திட வேண்டும்.  சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இம்முகாம்களில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் உரிய முறையில் ஆய்வு செய்து அன்றைய தினமே மூவிதழ் அடங்கலை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மேலும் புதன், வியாழன் தவிர்த்து  மீதமுள்ள பணி நாட்களிலும் மூவிதழ் அடங்கல் வேண்டி விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 இப்பணிகளை சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்கள், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும்.  விவசாயிகளுக்கு அவர்களுக்கான மூவிதழ் அடங்கல் வழங்கும் பணியில் எவ்வித குழப்பமுமின்றி உரிய முறையில் காலதாமதமின்றி சென்று சேருவதை உறுதி செய்திட வேண்டும்.  இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளும் விவசாயிகள் தங்களது வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.ஆர்.சுசீலா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், மாவட்ட கலெக்டரின்  நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான் உள்பட அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள், வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து