முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவுக்கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளின் ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை ஊதிய உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழகத்தில் உள்ள கூட்டுறவுக்கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் 22 ஆயிரம் ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் கூட்டுறவு கடன் நிறுவனங்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எய்தும் வகையில் நியாயமான வட்டி விகிதத்தில் கடன் மற்றும் வங்கிச் சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வருவதுடன், விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க் கடன், முதலீட்டுக் கடன் மற்றும் இடுபொருள்களை வழங்கி மாநிலத்தின் விவசாய உற்பத்தியை பெருக்குவதிலும், பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதிலும் பெரும்பங்கு ஆற்றி வருகின்றன.

விருதுகள் பெற்று சாதனை ....113 ஆண்டுகள் பாராம்பரியமிக்க தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்கள், கடந்த 7 ஆண்டுகளில் தொடக்க நிலை சங்கம் முதல் மாநில சங்கங்கள் வரை அனைத்து நிலைகளிலும் அனைத்து வகைகளிலும் சிறப்பாக செயல்பட்டு, அகில இந்திய அளவில் பல விருதுகள் பெற்று சாதனை புரிந்துள்ளன. கூட்டுறவு கடன் நிறுவனங்களின் சேவைகளை மேம்படுத்திடும் வகையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கணினிமயமாக்கப்பட்டு சிறந்த சேவையினை மக்களுக்கு வழங்கி, அவர்களின் நன்மதிப்பை பெற்ற காரணத்தினால், 31.03.2011 அன்று 26,245 கோடியே 17 லட்சம் ரூபாயாக இருந்த வைப்பீடுகள் 30.09.2018 அன்று 53,313 கோடியே 8 லட்ச ரூபாயாகவும், கடன் வழங்கல் 1,03,371 கோடியே 27 லட்சத்திலிருந்து 3,03,432 கோடியே 27 லட்ச ரூபாயாக உயர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

ஊதிய உயர்வுக்கு ஆணை....மேற்படி கூட்டுறவு கடன் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தக் காலம் முடிவுற்றதால், ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று, புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்க ஆணையிடப்பட்டது. இந்தக் குழுக்கள் தற்போது தங்களது பரிந்துரைகளை அளித்துள்ளன. மேலும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாண்மை இயக்குநர்களும், இவ்வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தினை நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர். இப்பரிந்துரைகளின் அடிப்படையில் பின்வரும் கூட்டுறவு கடன் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வினை வழங்க ஆணையிடப்படுகிறது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் 13 ஆயிரத்து 140 பேருக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 20 சதவீதம் வரை ஊதிய உயர்வும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் 4 ஆயிரத்து 767 பேருக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலுவைத்தொகையுடன் 20 சதவீத ஊதிய உயர்வும், நகரக்கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் 1,286 பேருக்கு கடந்த 2017-ம் ஆண்டில் ஜனவரி 1ம் தேதி முதல் நிலுவைத்தொகையுடன் 20 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும்.

20 சதவீதம் வரை..அதே போல பணியாளர் கூட்டுறவு்ககடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களில் பணியாற்றும் 1, 378 பேருக்கு கடந்த ஜூலை மாதம் 1ம் தேதியில் இருந்து நிலுவைத்தொகையுடன் 2.57 மடங்கு சதவீத ஊதிய உயர்வும் நகரக்கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் 462 பேருக்கு, கடந்த ஜூலை 1-ம் தேதி நிலுவைத்தொகையுடன் 2.70 மடங்கு ஊதிய உயர்வும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் பணி்யாற்றும் 485 பேருக்கு, கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நிலுவைத்தொகையுடன் 20 சதவீதம் ஊதிய உயர்வும் தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் பணியாற்றும் 117 பேருக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நிலுவைத்தொகையுடன் 15 சதவீத ஊதிய உயர்வும் தமிழ்நாடு மாநிலத்தலைமை கூட்டுறவு வங்கியை சேர்ந்த 413 ஊழியர்களுக்கு, கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 21 சதவீத ஊதிய உயர்வும் வழங்கப்படும்.

ரூ.143.72 கோடி கூடுதல்...அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளிலும் பணியாளர்களுக்கான இந்த ஊதிய உயர்வு சட்ட நடைமுறைகளின்படி வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வால் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 22,048 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.143.72 கோடி ஆகும்.தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைகள் கூட்டுறவு பணியை மேற்கொள்ளும் பணியாளர்களின் வாழ்வு மேம்பட்டு சிறக்க வழிவகுக்கும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து