முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாதாந்திர பூஜைக்காக இன்று நடை திறப்பு சபரிமலையில் கமாண்டோ போலீஸ் படை குவிப்பு போராட்டத்தை தடுக்க நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை,மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் கமாண்டோ படை குவிக்கப்பட்டுள்ளது சோதனைக்கு பிறகே பக்தர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மாதாந்திர பூஜை நடத்துவதற்காக திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களுக்கு நடை திறக்கப்படவுள்ளது. கடந்த மாதம் இதேபோன்று நடை திறக்கப்பட்டபோது, பெண்களை அனுமதிக்க மறுத்து கடும் போராட்டங்கள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு, இந்த முறை காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சபரிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில், 100 பெண் காவலர்கள் உள்பட 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 20 பேர் அடங்கிய கமாண்டோ படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகள் உள்பட பல இடங்களில், சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி தீபஒளித் திருநாளின் நள்ளிரவுப் பொழுது வரையில் 144 தடையாணை அமல்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு வயது ரீதியான கட்டுப்பாடு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து வயதுப் பெண்களையும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 28-இல் உத்தரவிட்டது.அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 17-ஆம் தேதி, மாதாந்திர பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, நடுத்தர வயதைச் சேர்ந்த 12 பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயற்சித்தனர். இருப்பினும், பக்தர்களின் கடுமையான போராட்டங்கள் காரணமாக அப்பெண்கள் கோயிலுக்கு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது. அதே, அந்த போராட்டங்களின்போது ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக கேரள அரசு கூறி வருகிறது.

மீண்டும் நடை திறப்பு: இத்தகைய சூழலில், மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் மீண்டும் திறக்கப்படவுள்ளது. தந்திரி கண்டரரூ ராஜீவரு, மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதரி ஆகியோர் ஸ்ரீகோயிலை, 5-ம் தேதி மாலை 5 மணிக்கு திறந்து விளக்கு ஏற்றவுள்ளனர். அதற்கு அடுத்த நாளில் சித்ரா திருநாள் பூஜை நடத்தப்பட்ட பின்னர், இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: நிலக்கலுக்கு செல்லும் பல்வேறு வழிகளில், காவல்துறை வேகத் தடுப்புகளை அமைத்துள்ளது. காவல்துறையினரின் சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படவுள்ளன. அதுவும், நிலக்கல் வரை மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இதற்கிடையே, பக்தர்களின் போராட்டத்துக்கு பக்க பலமாக இருக்கும், மாநில பா.ஜ.க.வின் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு மர்ம நபர்கள், துரித அஞ்சல் மூலமாக கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு தயார் - கேரள அரசு: சபரிமலை தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களை, முன்னின்று ஒருங்கிணைத்து வரும், நாயர் சமுதாய சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தேவஸ்வம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், செய்தியாளர்களிடம் கூறுகையில், நாயர் சங்கத்தினருடனான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கு அரசு தயாராகி வருகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதுடன் இருக்கிறோம். நாயார் சங்க அலுவலகத்தை, மர்ம நபர்கள் திட்டமிட்டுத் தாக்கியுள்ளனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து