இன்று தீபாவளித்திருநாள்: கவர்னர் - முதல்வர் இ.பிஎஸ்.ஓ.பி.எஸ். - தலைவர்கள் வாழ்த்து

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      தமிழகம்
eps ops 21-09-2018

சென்னை,தீபாவளித்திருநாள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட வாழ்த்து செய்தி வருமாறு:-மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது. இந்த நன்னாளில் மக்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும், தீபங்களை ஏற்றி வைத்தும், புத்தாடைகளை அணிந்தும், உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்து உண்டும், உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.

கவர்னர் பன்வாரிலால் புரோஹித்....தீபாவளி திருநாள் அனைவரது குடும்பங்களிலும் ஒளியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரவும் வாழ்த்துகிறேன். தீபஒளி, தன்னை சுற்றியுள்ள பகுதி முழுவதிலும் வெளிச்சத்தை தந்து பிரகாசமடைய செய்வது போல நாமும் நம்மைச்சுற்றியுள்ள மக்களுக்கு வெளிச்சத்தை அளிப்போம் என்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து