முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கந்தசஷ்டி விரதம் இருப்போம்... பாவங்களை தொலைப்போம்...

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சஷ்டியில் விரதம் இருந்து கந்தக் கடவுளைத் தரிசித்தால், இந்த ஜென்மத்துப் பாவமெல்லாம் பறந்தோடி விடும் என்றும் எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுவார்கள் என்றும் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் முருக பக்தர்கள். அத்தனை மகத்துவம் வாய்ந்தது கந்த சஷ்டி விரதம்!

தட்சன், காசிபன் என்ற இரண்டு பேர். தட்சன் சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவனாருக்கே மாமனாரானான். அகந்தையாலும் ஆணவத்தாலும் தட்சன், சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். அந்த தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான் என்றொரு புராணக் கதை உண்டு. அதாவது தட்சனாக இருந்த போது தந்தை சிவனாரை அழிக்க, சூரபத்மனாக மற்றொரு பிறவி எடுக்க, மைந்தன் முருகக் கடவுளால் கொல்லப்பட்டான்.

அடுத்து, காசிபனும் தவம் புரிந்து சிவனாரிடம் பல வரங்கள் பெற்றான். அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

இவர்களுள் சூரபத்மன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால்தான் தனக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டான்.

பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவனை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான்.

அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிப்பதாகத் தெரிவிக்கிறது புராணம். அந்தக் குழந்தையே... முருகப்பெருமான். பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் இதில் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவர் என்பதால் ஆறுமுகமே சிவம். சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். ஆறுமுக சுவாமியானார் கந்தவேல்! அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் செய்ததால், அதாவது சேர்த்ததால், முருகன் ஸ்கந்தபெருமான் ஆனார்.  முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.

முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத் தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள் செய்வது என் வேலை என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும் என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

முருகப்பெருமான் தன் தாய் உமையவளிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்ஸவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தைக் காணலாம்.

வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகக் கடவுள், அவற்றை தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவ பூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச்செந்தூர் திருத்தலம்.

இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தை தரிசிக்கலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைமாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன் - தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

கந்தசஷ்டி நாளில் விரதமிருந்து, ஆலயங்களில் நடைபெறும் சூரசம்ஹார வதத்தை தரிசித்து கந்தக் கடவுளின் அருளைப் பெறுவோம்!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து