முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் ரூ.56 கோடி மதிப்புள்ள நீரவ் மோடியின் 11 சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத் துறை

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, துபாயில் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ. 56 கோடி மதிப்புள்ள 11 சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,400 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்து விட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோடிய வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த சொத்து முடக்கத்துக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

நீரவ் மோடிக்கு சொந்தமாக லண்டன், நியூயார்க் நகரங்களில் உள்ள சொத்துகள், சிங்கப்பூர் மற்றும் பிற வெளி நாடுகளின் வங்கிகளில் இருக்கும் ரொக்கம், மும்பையில் இருக்கும் வீடு உள்ளிட்டவற்றை முடக்குவது தொடர்பாக சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் 5 உத்தரவுகளை அமலாக்கத் துறை வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட வெளி நாடுகளின் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் முடிந்தது.

இதன் விளைவாக, இந்தியா, 4 வெளிநாடுகளில் உள்ள நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.637 கோடி மதிப்புடைய அசையா சொத்துகள், நகைகள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. துபாயில் நீரவ் மோடி மற்றும் அவரது நிறுவனத்திற்கு சொந்தமாக 7.79 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்ததாகவும், அதன் மதிப்பு ரூ 56 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு சமமான 11 சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. முன்னதாக, அவை நீரவ் மோடிக்கு சொந்தமானதுதான் என்பதை அமலாக்கத் துறையினர் ஆவணங்கள் மூலம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.4,800 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நீரவ் மோடியின் பல்வேறு சொத்துகளை அமலாக்கத் துறை இதுவரை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து