முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி வரலாற்றிலேயே முதன்முதலாக 17 ஆயிரம் பேருக்கு ஒரே ஆண்டில் வேலைவாய்ப்பு

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, அரசு தேர்வாணயத்தின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் 17 ஆயிரம் பேர் அரசு வேலைவாய்ப்புக்கு எந்த புகாரும் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து சென்னையில் இருவரும் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தனர், அப்போது அவர்கள் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் முற்றிலும் வெளிப்படைத் தன்மையினை கொண்டு வரும் விதமாக தகுந்த மாற்றங்களை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது. தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் ஆணையம் இம்முயற்சிகளை எடுத்து வருகின்றது.

தேர்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் பொழுது தேர்வர்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு ஓரே இடத்தில் பதில் பெறுவதற்கு ஏதுவாக அண்மையில் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய குறும்படம் ஒன்றை Youtube தளத்தில் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது பெரும் வரவேற்பைப் பெற்று பல்லாயிரக்கணக்கான தேர்வர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.

தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கும் முறையில் இருந்து இணைய வழியில் அவர்தம் இருப்பிடத்திலிருந்தே விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டதினால் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துள்ளது.

2010-ம் ஆண்டு பல்வேறு தேர்வுகளுக்கு மொத்தம் 17.5 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். தற்போது இணையவழியே விண்ணப்பம் பெறப்படும் நிலையில், 40 லட்சம் வரையில் ஓராண்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இச்செயல்பாட்டினால் தேர்வாணையத்தின் பணிச்சுமையை குறைந்ததோடு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைமீதான நம்பகத் தன்மையை விண்ணப்பதாரர்களிடையே அதிகரித்துள்ளது.

தேர்வுமுறையில் மாற்றம்

கடந்த ஓர் ஆண்டு காலமாக தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தேர்வு எழுதுபவர்களின் அனைத்து விவரங்களும் அடங்கிய கொள்குறி (OMR) விடைத்தாள்கள் வழங்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தேர்வு குறித்து தேர்வர்கள் மனதில் இருந்த ஐயப்பாடுகள் நீக்கப்பட்டதுடன் எவ்வித தவறும் நிகழாத வண்ணம் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்காக தேர்வாணையத்திற்கு நேரில் வரும் நடைமுறை இருந்து வந்தது. இதனால் தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அவர்தம் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் நேரில் வந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஒரு தேர்வர் நேரடியாகவோ பெற்றோர் / பாதுகாவலருடனோ கலந்தாய்வுக்கு தேர்வாணையத்திற்கு நேரடியாக வந்து செல்ல சுமார் 2,000 ரூபாய் பயணச்செலவு உள்ளிட்ட பொருட்சுமையுடன் காலவிரயமும் ஏற்படுகிறது என்பதை கவனமுடன் பரிசீலித்த தேர்வாணையம் இணைய வழியிலேயே தேர்வர்கள் அவர்தம் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொகுதி- IV தேர்விற்காக 31,424 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்வாறு பெறப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தும் 35 நாட்களுக்குள் சரிபார்த்து முடிக்கப்பட்டுள்ளன. இதே எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை நேரில் அழைத்து சான்றிதழ் சரிபார்க்க 157 நாட்கள் ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயல் மூலம் சுமார் ஆறு கோடி ரூபாய் அளவிற்கு விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படயிருந்த செலவும் வீண் அலைச்சலும் தவிர்க்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வு போன்ற பல்வேறு பணிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியே தகவல் பறிமாற்றம் செய்யப்பட்டு தாமதம் எதுவும் இன்றி குறித்த நேரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு வருகின்றன.

தேர்வு முடிவுகள்

மேலும் கடந்த 3 மாதங்களாக தேர்வாணையம் வெளியிடும் அனைத்து அறிவிக்கைகளிலும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு மற்றும் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் முறையாக அறிவிக்கப்பட்டு அதே காலகட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இது தவிர ஒரு நாளில் 100 தேர்வர்கள் மட்டுமே கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு பணி ஒதுக்கீட்டாணை வழங்கப்பட்டு வந்தது. அண்மையில் நடைபெற்ற உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கான தெரிவுக்கு ஒரே நாளில் சுமார் 800 விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணையும் அன்றே வழங்கப்பட்டு தேர்ந்தோர் பட்டியலும் துறைத்தலைவருக்கு அன்றையதினமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து வெறும் 67 நாட்களில் பணி ஒதுக்கீட்டாணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் நடைபெற்ற நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தேர்வு அறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் முதனிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தேர்ந்தோர் பட்டியல் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ஒருங்கிணைந்த பொறியியல் பணியாளர்களுக்கான தேர்வு முடிவுகள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 7 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி-I க்கான முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் தவிர்த்து எந்த ஒரு தேர்வு முடிவுகளும் மூன்று மாதங்களுக்கு மேல் நிலுவையில் இல்லை. மேலும் நிலுவையில் உள்ள தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற தேர்வு முடிவு கால அட்டவணையும், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அவ்வப்போது தெரிவிக்கப்படுகின்றன.

தேர்வு அறிவிக்கைகளைப் பொறுத்த வரையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் 25 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டு இறுதிக்குள் மேலும் பல்வேறு பதவிகளுக்கான 20 அறிவிக்கைகள் வரவிருக்கின்றது. தேர்வாணைய வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையில் நடப்பாண்டில் 17,000-க்கும் அதிகமான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசின் பல்வேறு துறைகளுக்கும் எவ்வித குறைபாடுகளுக்கும் இடமின்றி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

தேர்வாணையத்தில் செயல்பட்டு வரும் மந்தனத்தன்மை கொண்ட துறைகள் மற்றும் பிரிவுகள் அனைத்தையும் கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பகுதி முழுவதும் சம்மந்தப்பட்ட நபர்கள் தங்களுடைய கைரேகை பதிவுகளின் மூலம் அவர்தம் விவரம் சரிபார்க்கப்பட்டே அறைக்கதவுகள் திறக்கும் வண்ணம் நவீன பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவல்கள் அனைத்தும் நிரந்தரப் பதிவாக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் கொண்டு வரப் பட்டுள்ளது.

தொகுதி 1 தேர்வுகள்

2017-ம் ஆண்டுக்கான தொகுதி-I க்கான முதன்மை எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிட அனைத்து நடைவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டள்ளன. இனிவரும் காலங்களில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2 மாதங்களில் முதல்நிலைத் தேர்வும், 2 மாதங்களில் தேர்வு முடிவுகளும், 2 மாதங்களில் முதன்மை எழுத்துத் தேர்வும், 3 மாதங்களில் எழுத்துத் தேர்வு முடிவுகளும், 15 நாட்களில் நேர்முகத் தேர்வும் நடத்தி, 10 மாதங்களுக்குள் இறுதி முடிவுகள் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்களின் நலன் கருதி மேற்கூறிய பல்வேறு முன்முயற்சிகளை தேர்வாணையம் எடுத்து வருகிறது. தேர்வர்கள் தேர்வு குறித்து அவ்வப்போது தவறாக வரும் செய்திகளையோ வதந்திகளையோ இடைத் தரகர்களையோ நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தேர்வாணையத்தை நேரிலோ, [email protected] மின்னஞசல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து