முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டி-20: 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி - தொடரையும் வென்றது

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

லக்னோ : வெஸ்டிண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

ரோகித் அபாரம்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது  20 ஓவர் கிரிக்கெட் போட்டி லக்னோவில் எகனா மைதானத்தில் நடைபெற்றது.  டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில்  பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களம் இறங்கினர். துவக்கத்தில் இந்த ஜோடி நிதானமாக ரன்களை சேகரித்து படிப்படியாக வேகத்தை அதிகரித்தது. குறிப்பாக ரோகித் சர்மாவின் ஆட்டத்தின் அனல் பறந்தது. அவருடைய பேட்டில் பட்ட பந்துகள் நாலாபுறமும் சிதறின. பவுண்டரிகளும் சிக்சரும் ரோகித் சர்மா விளாசித்தள்ளினார்.

தீபாவளி விருந்து

மறுமுனையில், ஷிகர் தவான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினார். இதனால், விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 100 ரன்களை கடந்தது. 13.6 ஓவர்களில் 123 ரன்களை இந்திய அணி எட்டியிருந்த போது, ஷிகர் தவான் 43 ரன்களில் (41 பந்துகள்) வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய இளம் வீரர்  ரிஷாப் பண்ட் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ஆனால், மறு முனையில், சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்து ரசிகர்களுக்கு, ரோகித் சர்மா தீபாவளி விருந்து படைத்தார். அவருக்கு பக்க பலமாக ராகுலும் விளையாடினார். அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா, கடைசி ஓவரில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்கும் 4-வது சதம் இதுவாகும்.

196 ரன்கள் இலக்கு

இறுதியில் இந்திய அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 61 பந்துகளில் 111 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 16 பந்துகளில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதையடுத்து, வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் ஹோப், ஹட்மயர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அணியில் அதிகபட்சமாக பிராவோ 23 ரன்கள் எடுத்தார்.

தொடரை வென்றது

இறுதியில் கேப்டன் பிரித்வொய்ட் 15(19) ரன்களும், தாமஸ் 8(4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், கலில் அஹமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். இதன்மூலம் வெஸ்டிண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரையும் இந்திய அணி வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து