டிரம்புடன் வாக்குவாதம்: செய்தியாளருக்கு வெள்ளை மாளிகையில் நுழைய அனுமதி ரத்து பெண் உதவியாளரிடம் அநாகரீகமாக நடந்ததாக புகார்

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      உலகம்
trump 08-11-2018

வாஷிங்டன்,அமெரிக்க இடைத் தேர்தல் முடிவுகளை அடுத்து நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பின் போது டிரம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சி.என்.என். செய்தியாளரின் பத்திரிகையாளருக்கான அனுமதி அட்டை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை பெண் உதவியாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதிநிதிக்களுக்கான இடைத் தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சி சரிவைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் டிரம்ப். அப்போது சி.என்.என். செய்தியாளர் அகோஸ்டா, லத்தீன்அமெரிக்காவில் இருந்து தெற்கு அமெரிக்க எல்லைக்கு இடம்பெயரும் அகதிகள் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து மற்றொரு கேள்வியைக் கேட்ட அகோஸ்டாவிடம், இத்தோடு போதும் என்று டிரம்ப் இடைமறித்தார்.உடனே வெள்ளை மாளிகையில் இருந்த பெண் உதவியாளர் அகோஸ்டாவிடம் இருந்து மைக்கைப் பறிக்க முயன்றார். ஆனால் மைக்கைத் தராமல் அவரைத் தடுத்தார் அகோஸ்டா. அப்போது அகோஸ்டாவின் கை, பெண்ணின் முழங்கையில் பட்டது. அப்போது, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் மேம் என்று தெரிவித்தார் அகோஸ்டா.

இதைத் தொடர்ந்து என்.பி.சி. செய்தியாளர் பீட்டர் அலெக்ஸாண்டர், அகோஸ்டாவுக்கு ஆதரவாகப் பேச முயன்றார். அவரையும் இடைமறித்த டிரம்ப், நீங்கள் முரட்டுத்தனமான, கொடூரமான நபர் என்று சாடினார். பத்திரிகைகளே இப்படித்தான். நான் மக்களுக்கு நன்மைகளைச் செய்தால்கூட, அதை நல்ல விதமாகக் காட்ட மாட்டார்கள் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அகோஸ்டாவின் பத்திரிகையாளர் அனுமதி அட்டை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், இளம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட மூர்க்கத்தனமான அவமதிப்பு இது என்று தெரிவித்துள்ளார்.இதனிடையே சி.என்.என். நிர்வாகம், சம்பந்தப்பட்ட செய்தியாளர் அகோஸ்டாவுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. டிரம்ப்பின் செயலுக்கு பத்திரிகையாளர்களும், நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து