அரசியல் உள்நோக்கத்தோடு காட்சிகள் அமைத்திருக்கிறார்கள் சர்கார் படத்திற்கு அமைச்சர்கள் கண்டனம்

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      தமிழகம்
Sarkar ministers comments 08-11-2018

சென்னை,விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை படக்குழு நீக்க வேண்டும். இல்லையென்றால், நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுப்போம் என செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

கடம்பூர் ராஜூ:-சர்கார் படத்தைத் தயாரித்தவர்கள், படத்துக்காக அல்லாமல், அரசியல் உள்நோக்கத்தோடும், வன்மத்தோடும் சில காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்வருடன் ஆலோசித்து, நிச்சயமாக அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கக் கூடாது என அறிவுறுத்துவோம். அவர்களாக நீக்கி விட்டால் நல்லது. இல்லையென்றால், என்ன செய்வது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார் அமைச்சர்.

கே.பி. அன்பழகன்:-சர்கார் திரைப்பட விமர்சனத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.தருமபுரி அருகே நடுப்பட்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது:-அண்மையில் வெளிவந்துள்ள சர்கார் திரைப்படத்தில் இலவசங்கள் தேவையில்லை என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை வெளியிட்டுள்ள நிறுவனம் அரசுக்கு எதிராகவே படம் தயாரிக்கும். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்று மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் அனைத்தும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே அளிக்கப்படுகிறது. குறிப்பாக, கல்வித்துறையில் வழங்கப்படும் அரசு நலத் திட்டங்கள், மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவுமே அளிக்கப்படுகிறது. இன்றைய மக்களின் மனநிலை ஆளும் அரசுக்கு ஆதரவாகவே இருக்கிறது. சர்கார் படத்தில் எப்படி காட்சிகள் வந்தாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சி.வி. சண்முகம்:-காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போருரில் இடைத் தேர்தல் வியூகம் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பிறகு சர்கார் திரைப்படம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-சர்கார் திரைப்படத்தில் அரசின் நலத் திட்டங்களுக்கு எதிரான விமர்சனம், வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது. குறிப்பாக அரசின் இலவசப் பொருள்களை எரிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. இது அரசை அவமதிக்கும் செயலாகும். எனவே, திரைப்படத்தின் தயாரிப்பாளர், திரையரங்குகள் மீது வழக்கு தொடர்வது ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து