முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம் அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

அழகர்கோவில், - அழகர்மலை உச்சியில் முருகபெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலானது வரலாற்று சிறப்பு மிக்கது. ஒளவையாருக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று முருகன் கேட்டு நாவல் மரத்திலிருந்து காட்சி தந்த புனித ஸ்தலமாகும். இன்றளவும் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் போது  நாவல்பழம் பழுக்கும் ஸ்தலவிருட்சமான நாவல் மரம் முன்பாக சூரசம்ஹாரம் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் இந்த திருவிழா முக்கியமானது.
இவ்விழா நேற்று 8ம் தேதி காலையில் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், மற்றும்  யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. பின்னர் உற்சவற்கு மஹாஅபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி அன்னவாகனத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தின் வழியாக புறப்பாடு நடந்தது. முன்னதாக மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் தீபாரதனைகளும், சண்முகார்ச்சணையும் நடந்தது.  சுற்றுவட்டாரம் மற்றும் வெளிமாவட்ட  பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று 9ம் தேதி வழக்கமான பூஜைகளும், காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். நாளை 10ம் தேதி காலையில் யானை வாகனத்திலும்,  11ம் தேதி ஆட்டு கிடாய் வாகனத்திலும், 12ம் தேதி சப்பர வாகனத்திலும்  சுவாமி புறப்பாடு நடைபெறும். 13ம் தேதி செவ்வாய் கிழமையன்று காலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்ஹாரவிழா குதிரை வாகன புறப்பாட்டுடன் நடைபெறும். மாலை 4.35 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெறும். பின்னர் அதே வாகனத்தில் 5.40 மணிக்கு முருகபெருமான் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினிதிக்கில் சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்து, ஸ்தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார காட்சி நடைபெறும். தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் சாந்த அபிஷேகம் நடைபெறும். 14ம் தேதி காலையில் 10.20 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீர் உற்சவத்துடனும் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவையொட்டி தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இந்த திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து