இந்தியாவின் ஐ.என்.எஸ் அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பலின் முதல் கண்காணிப்பு இயக்கம் பாகிஸ்தான் கவலை

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      உலகம்
INS Arihant  09-11-2018

இஸ்லாமாபாத்,அணு ஆற்றலில் இயங்கும் "ஐ.என்.எஸ் அரிஹந்த்' நீர்மூழ்கிக் கப்பலின் முதல் கண்காணிப்பு இயக்கத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அதுதொடர்பாக கவலை தெரிவித்துள்ளது. எனினும், தெற்காசிய பிராந்தியத்தில் இதுபோன்ற அணு ஆயுத சவால்களை எதிர்கொள்ள அந்நாடு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகமது பைசல்   கூறியதாவது:அணு ஆற்றலில் இயங்கும் திறன் கொண்ட இத்தகைய நீர்முழ்கிக் கப்பல் இயக்கப்படுவது, தெற்காசிய பிராந்தியத்தில் இது முதல் முறையாகும். இந்த நடவடிக்கை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு மட்டுமல்லாது,சர்வதேசத்துக்கான கவலைக்குரிய விவகாரமாகும். இந்திய அதிகாரத் தலைமை, மோதலுக்கு உகந்த வகையில் வெளிப்படுத்தும் சொற்களானது, தெற்காசிய பிராந்தியத்தின் வியூகம் சார் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் வகையில் உள்ளன.மேலும், அணு ஆயுதங்களை கையாளும் இந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகத்தை எழுப்பக் கூடிய வகையிலும் இருக்கின்றன. எனினும், சமீபத்திய நடவடிக்கையால் தெற்காசிய பிராந்தியத்திலும், அணு ஆயுத ரீதியாகவும் எழுந்துள்ள சவால்களை சமாளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை என்று முகமது பைசல் கூறினார்.

முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட "ஐ.என்.எஸ் அரிஹந்த்' நீர்மூழ்கிக் கப்பல், மொத்தம் 6 ஆயிரம் டன் எடை கொண்டது. யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கக் கூடிய அக்கப்பலில் மொத்தம் 4 ஏவுதளங்கள் உள்ளன. அதன் வாயிலாக ஒரே நேரத்தில் 12 சிறிய ரக ஏவுகணைகளையோ அல்லது 3,500 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் 4 பெரிய ஏவுகணைகளையோ செலுத்த முடியும்.அணு ஆற்றலில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பலானது குறிப்பிட்ட வல்லரசு நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தற்போது இந்தியாவும் அந்த வகை கப்பலை கொண்டிருப்பது நாட்டின் படை வலிமையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து