தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் எதிரொலி: 'சர்கார்' படத்தில் இடம்பெற்ற சர்ச்சை காட்சிகள் நீக்கம்

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      தமிழகம்
sarkar 2018 11 09

சென்னை, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக சர்கார் படத்தில் இடம் பெற்ற சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்டது. சர்கார் படத்தில் என்னென்ன காட்சிகள் நீக்கப்பட்டன, என்ன வசனங்கள் நீக்கப்பட்டன என்பது குறித்து தணிக்கை குழு தெரிவித்துள்ளது.

சர்ச்சை காட்சிகள்

நடிகர் விஜய் நடித்த'சர்கார்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியானதை அடுத்து அதில் உள்ள காட்சிகள் மிகப்பெரிய எதிர்ப்பைச் சந்தித்தன. படத்தில் தமிழக அரசின் விலையில்லாப் பொருட்களை எரிப்பது போன்று  காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமள வல்லி என்ற பெயர் படத்தில் வில்லி பாத்திரத்துக்கு சூட்டப்பட்டிருந்தது.

இதனால் கோபமடைந்த அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும்  அமைச்சர்கள் கூறுகையில் , தமிழக அரசின் இலவசத் திட்டங்களுக்கு எதிராக போராடத் தூண்டும் விதமாக படக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன, இது அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டும் செயல் என கண்டித்தனர். சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சட்ட நடவடிக்கைகளை படக்குழுவினர் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்திருந்தார். நேற்று முன்தினம் வழக்கு தொடர்வது பற்றியும் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிடக் கோரி மதுரையில் அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டம் கோவை, சென்னை,தாராபுரம்,திருப்பூர், சேலம்  என பல நகரங்களுக்கு விரிவடைந்தது. தமிழகம் முழுவதும் பெரும்பாலன இடங்களில் திரையரங்கங்களில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பேனர்கள் கிழிக்கப்பட்டன.

காட்சியை நீக்க...

இதனால் இப்பிரச்சனையில் இறங்கி வந்தது படக்குழு, 'சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டது. எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும் என முடிவு செய்து, நீக்கப்பட்ட காட்சிகள் தவிர்த்து படத்தைத் திரையிடுவோம். தணிக்கை குழு அனுமதி பெற்று இதைச் செய்வோம் எனத் தெரிவித்திருந்தது. படத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இயற்பெயரைக் குறிப்பிடும் காட்சிகள், சத்தமின்றி மியூட் செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் அ.தி.மு.க.வினர் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மறு தணிக்கை...

இந்நிலையில் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவும், ஜெயலலிதா இயற்பெயரைக் குறிப்பிடும் காட்சிகளை மியூட் செய்யவும் நேற்று முன்தினம் மும்பையில் உள்ள தணிக்கைத்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கை செய்யப்பட்டதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது.

காட்சிகள் நீக்கம்

படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த தகவல் தணிக்கைச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் திரைப்படம் ஓடும் நேரம் 164.46 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 44 நிமிடங்கள் 46 நொடிகள். இதில் மறு தணிக்கையில் இலவசங்களை தீயிட்டு எரிக்கும் காட்சி 5 வினாடிகள் இடம்பெறும் (ரீல் நெ.7) காட்சி நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட பின் படம் ஓடும் நேரம் 164.41 நிமிடங்கள். அதாவது 2 மணி நேரம் 44 நிமிடங்கள், 41 நொடிகள். காட்சியாக படத்தில் நீக்கப்பட்டது 5 நொடிகள் மட்டுமே. இதுதவிர ரீல் நம்பர் 7 மற்றும் 8-ல் இடம்பெறும் கோமளவல்லி என்று அழைக்கும் வசனங்கள் மியூட் செய்யப்பட்டன. இது எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் மியூட் செய்யப்படும்.

சப் டைட்டிலும்...

இது தவிர டெங்கு கொசு பற்றி விஜய் பேசும் பொதுப்பணித்துறை என்ற வார்த்தையும் (ரீல்.நெ.4) மியூட் செய்யப்பட்டது. ‘56 வருஷம்’ (ரீல் நெ.7) என்ற வசனமும் மியூட் செய்யப்பட்டது. மேற்கண்ட காட்சியில் வரும் சப் டைட்டிலும் நீக்கப்படுகிறது. இவ்வாறு சான்றிதழில் தெரிவிக்கப்பட்டு மத்திய தணிக்கைத்துறை அலுவலர் லீலா மீனாட்சி கையொப்பமிட்டுள்ளார். இதனால் சர்க்கார் சர்ச்சை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து மறுதணிக்கை செய்யப்பட்ட சர்கார் திரைப்படம் நேற்று இரவு காட்சி முதல் திரையிடப்பட்டது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து