முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்படங்களில் இக்கால நடிகர்கள் எம்.ஜி.ஆரைப் போல் நல்ல கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேட்டி

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திரைப்படங்களில் இக்கால நடிகர்கள் எம்.ஜி.ஆரைப் போல் நல்ல கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை யூனியனுக்கு உட்பட்ட தென்னம்பட்டி, கொசவபட்டி, பாடியூர், குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் மக்கள் அளித்த பல்வேறு மனுக்களையும் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிச்சாமி, தாசில்தார் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் டாக்டர் மு.தம்பித்துரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தனது திரைப்படங்களில் சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை தெரிவித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன் மூலம் மக்களின் நன்மதிப்பையும் பெற்று ஆட்சிக்கு வந்தார். அதனால் தான் அவர் மறைந்த பின்னரும் மக்கள் மனதில் நிரந்தரமாக வாழ்ந்து வருகிறார். அவரைப் போலவே புரட்சித்தலைவி அம்மாவும் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வாழ்ந்து மறைந்துள்ளார். இதுபோன்ற தலைவர்களை இழிவுபடுத்துவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தை தயாரித்தவர் தி.மு.க.வின் குடும்ப உறுப்பினர். அவ்வாறு இருக்கும் போது தனது பணபலத்தை பயன்படுத்தி மக்கள் மீது விஷமத்தனமான செய்தியை பரப்பும் வகையில் சில காட்சிகளை இடம் பெற வைத்து விட்டனர். படம் வெளியாவதற்கு முன்பாகவே இதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கலாம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். ஆனால் தணிக்கைத் துறையினர் இதனை சரிவர கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.
மறைந்த தலைவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி தனக்கு கைதட்டல் கிடைக்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள் இருக்கக் கூடாது. புரட்சித்தலைவரைப் போல மக்களிடையே நல்ல எண்ணங்களை பரப்பும் நோக்கில் நடிக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள சர்கார் பட பிரச்சனை மறு தணிக்கை மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து