முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வை உடைக்க எதிரிகளுடன் சேர்ந்து ''தினகரன்" சதி கோவையில் முதல்வர் எடப்பாடி பேட்டி

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

கோவை,அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என்பதற்காக எதிரிகளுடன் சேர்ந்து டி.டி.வி. தினகரன் சதித்திட்டம் தீட்டுகிறார் என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: எம்.எல்.ஏ-க்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள், மக்கள் பணியெல்லாம் முடங்கியிருக்கிறது என்று...
பதில்: யாரால் முடங்கியிருக்கிறது? 18 எம்.எல்.ஏ.-க்களால் தான் முடங்கியிருக்கிறது. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக இயக்கம்.  அம்மா இந்த இயக்கத்தை கட்டிக் காத்து சுமார் பதினைந்தரை ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து நாட்டுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை அளித்தார்கள்.  அம்மாவின் உழைப்பால் இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக்கப்பட்டார்கள். அம்மா அவர்களுடைய அரசுக்கு துரோகம் விளைவித்தவர்களுக்கு தண்டனையை  இறைவன் அளித்துள்ளான். அவர்கள்தான் துரோகம் செய்தார்கள், ஆட்சிக்கும் துரோகம் செய்தார்கள்.  18 சட்டமன்ற தொகுதிகளிலும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, தொய்வே கிடையாது. 18 சட்டமன்றத் தொகுதியில் மட்டுமல்ல, 234  சட்டமன்றத் தொகுதியிலும் அனைத்து பணிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
 
கேள்வி: வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னம், தற்போது துரோகிகளின் சின்னமாக மாறியிருக்கிறது என்று டிடிவி பேசியிருக்கிறார்...
பதில்: அவரே துரோகிதான். அவர்தான் முதல் துரோகி. இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கத்தை உடைக்க வேண்டும் என்று எதிரிகளோடு சேர்ந்து சதிசெய்து கொண்டிருப்பவர் டி.டி.வி.தினகரன் அவர்கள், அது நாட்டுமக்களுக்கும் தெரியும், கழகத்தில் இருக்கின்ற நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும்.

கேள்வி: தேர்தல் வாக்குறுதியின்போது அம்மா அவர்கள், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்போன்
பதில்: அன்றையதினம் மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்தார்கள்,பெரும்பாலானவர்களிடம் செல்போன் இல்லாமல் இருந்தது. இப்பொழுது அனைவரிடத்திலும் செல்போன் இருக்கிறது.  இருந்தாலும், அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது.

கேள்வி: அந்த 3 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு இரண்டாவது முறையாக கவர்னருக்கு அழுத்தம் கொடுத்ததாக சொல்கிறார்கள், ஆனால் அந்த 7பேரின் விடுதலைக்காக அழுத்தம் கொடுப்பதில் சுணக்கம் இருக்கிறது என்கிறார்களே? 
பதில்: அப்படி கிடையாது.  சட்டரீதியாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் இதுவரை நாம் விடுதலை செய்திருக்கிறோம்.  அந்த அடிப்படையில்தான் இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று மேதகு ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அமைச்சரவை கூடி, தீர்மானம் நிறைவேற்றப் பெற்று ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது, ஆளுநர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

கேள்வி: சந்திரபாபு நாயுடு நேற்று தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா என்று கேள்வி கேட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்?
பதில்: சிரிப்புதான் வருகிறது.  இவர்கள் அவ்வப்போது பச்சோந்தி போல் நிறம் மாறக் கூடியவர்கள். திமுக முதலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டதால், அவர்களுக்கு ஓரளவு பெரும்பான்மை கிடைத்தது, அப்பொழுது பாரதீய ஜனதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்கள். இப்பொழுது பாரதீய ஜனதா தீண்டத்தகாத கட்சி, மதவாதக் கட்சி என்று சொல்கிறார்கள். ஆனால், இவர்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சராக இருந்தபொழுது, இதெல்லாம் கண்ணுக்கே தெரியவில்லை. அதுவும், முரசொலிமாறன் உடல்நிலை குன்றி ஒரு வருடம் பேச்சுமூச்சு இல்லாமல் மருத்துவமனையில் இருந்தார்.  அப்பொழுதுகூட, மத்தியில் ஆண்ட பாரதீய ஜனதா அரசு அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருந்தது. அப்பொழுதெல்லாம் பாரதீய ஜனதா நல்ல கட்சி, நல்ல அரசு என்று பாராட்டினார்கள், இப்பொழுது மதவாதக் கட்சி என்று சொல்கிறார்கள்.

39 இடங்களில் வெற்றி... நாங்கள் அப்படியல்ல, எங்கள் கொள்கையில் எப்பொழுதும் பிடிப்போடு இருக்கிறோம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2014 தேர்தலில் தன்னந்தனியாக நின்று, தமிழக மக்களின் பேராதரவோடு தமிழகத்தில் 39 இடங்களில் வெற்றி பெற்று, இந்தியாவிலேயே நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சி என்ற ஒரு பெரிய வாய்ப்பை நம் தமிழகத்திற்கு தேடித் தந்தார்கள்.  அன்றையிலிருந்து இன்று வரைக்கும் நாங்கள் யாருடனும் கூட்டணியே வைக்கவில்லை. தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ, அப்பொழுது ஆதரிக்கின்றோம், தமிழகத்திற்கு யார் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்களோ, அப்பொழுது நாங்கள் எதிர்ப்புதெரிவிக்கின்றோம்.

தமிழக மக்களுடைய உரிமைகளை காப்பதற்காகவும், தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கின்ற திட்டங்களை பெறுவதற்காகவும் மத்திய அரசோடு இணக்கமாக இருக்கிறோமே தவிர, கூட்டணி கிடையாது.  ஆனால் அவர்கள் பாரதீய ஜனதா சரிகின்றபொழுது உடனடியாக மாறி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு, வெற்றி பெற்று மத்தியில் அமைச்சராக இருந்தார்கள். ஆகவே, காலத்திற்கேற்றவாறு தங்களது கொள்கைகளை மாற்றிக் கொள்வார்கள். 

போராடி, வாதாடி...சந்திரபாபு நாயுடு 2011ல் பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டணி சேர்ந்து, போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்கள், நாலரை ஆண்டுகாலம் அனுபவித்து விட்டார்கள்.  இப்பொழுது தேர்தல் வரும்போது மாறிவிட்டார்கள். இவர்கள் பச்சோந்திபோல் நிறம் மாறுபவர்கள், கொள்கை பிடிப்பு கிடையாது. ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும் கொள்கை பிடிப்போடு இருக்கும் கட்சி, ஆட்சியும் அதே மாதிரிதான். அதேபோல் மத்தியில், தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நன்மைகளை பெறுவதற்கு போராடி, வாதாடி நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.

வேண்டியதுதானே ? இப்பொழுது இவ்வளவு பேசுகிறாரே, இப்பொழுது வந்துவிட்டு சென்றாரே சந்திரபாபு நாயுடு, தமிழகத்தில் பாலாற்றில் எவ்வளவு அணை கட்டுகிறார்கள், ஏதாவது பேசினாரா? பக்கத்தில் துரைமுருகன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சட்டமன்றத்தில் மட்டும் இதை எழுப்பினார்.  பக்கத்தில்தானே உட்கார்ந்து கொண்டிருந்தாரே, உடனே கேட்க வேண்டியதுதானே? கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டியிருக்கிறார்.  இன்றைக்கு பாலாறே வறண்டு போய்விட்டது.

கவலையே கிடையாது... உண்மையிலேயே மனசாட்சி இருந்தால், தமிழ்நாட்டு மக்கள் மீது அன்பு, பாசம், அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் இருந்திருந்தால் இவர்கள் அதை கேட்டிருக்க வேண்டும், அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருந்தது. நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து நிறுத்துகிறீர்கள், தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இன்றைக்கு நீராதரமாக விளங்குவது இந்த வட மாவட்டத்தில் பாலாறுதான். ஆகவே, நீங்கள் அந்த தடுப்பணைகளையெல்லாம் இடித்துவிட்டு, எங்களுக்கு கிடைக்கவேண்டிய நீரை தயவு செய்து கொடுங்கள் என்று ஒரு வார்த்தையாவது கேட்டார்களா? ஆனால் அதிகாரம் தான் இவர்களுக்கு முக்கியம், பதவி தான் முக்கியம், ஆகவே, அவர்களுக்கு நாட்டு மக்களைப் பற்றியோல, தமிழ்நாட்டு விவசாயிகளைப் பற்றியோ கவலையே கிடையாது, அதிகாரம் மட்டும்தான் அவர்களுக்குத் தேவை.


கேள்வி: சர்க்கார் பட பேனர்களை அதிமுக காரர்கள் கிழித்தார்கள் என்று...
பதில்: அ.தி.மு.க.காரர்தான் கிழித்தார் என்பது தவறான செய்தி.  பொதுமக்கள் சேர்ந்து தம்முடைய எதிர்ப்பை தெரிவித்ததன் காரணத்தினால் அவர்கள் அந்தக் காட்சியை அகற்றியிருக்கிறார்கள். அந்தந்த தலைவர்கள் கொண்டுவந்த திட்டத்தை கொச்சைப்படுத்துகின்றபொழுது, அவமானப்படுத்துகின்ற பொழுது தன்மானம் உள்ள எந்த ஒரு கட்சிக்காரனும் கொதித்து எழுவார்கள்.

கேள்வி: 48 மணி நேரத்தில் கடலோரப் பகுதிகளில் மழை வருமென்று வானிலை ஆராய்ச்சி நிலைத்தில் சொல்கின்றார்களே?
பதில்: வானிலை ஆராய்ச்சி நிலையம் சொல்லிக் கொண்டே இருக்கிறது இதுவரை மழை வந்த மாதிரி தெரியவில்லை. அவர்கள் எத்தனையோ முறை அறிவிப்பு கொடுத்துவிட்டார்கள், ஆனால் மழை வந்த மாதிரி தெரியவில்லை, இருந்தாலும், அந்த அறிவிப்பிற்கு இணங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசால் அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருவாய்த் துறை அமைச்சர் அதில் தனியாக கவனம் செலுத்தி வருகிறார்.

கேள்வி: இந்த அரசு விரைவில் தடம்புரளும் என்று கமல் சொல்லியிருக்கின்றாரே?
பதில்: கமலுக்கு 64 வயது வரை படத்தில் நடித்து, ஓய்வு பெற்ற பிறகு, மக்கள் அவரை கண்டு கொள்ளாததால், இப்பொழுது அரசியலில் ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். அரசியலில் அவருடைய நடிப்பு எடுபடாது. திரைப்படங்களில் 44 ஆண்டு காலம் நடித்தும் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்த பிறகு அரசியலுக்கு வந்தா அவருடைய நடிப்பு எடுபட போகிறது?

கேள்வி: சர்கார் பட விவகாரத்தில் தணிக்கைக் குழு அனுமதி அளித்த பிறகும்.....?
பதில்: ஏற்கனவே சுமூகமானதை ஏன் மீண்டும், மீண்டும் பிரச்சினை செய்கின்றீர்கள்? ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களும் தயவுசெய்து, அருள்கூர்ந்து விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

 
கேள்வி: சத்துணவு ஊழியர்களுக்கு நலவாரியம் அமைப்பது தொடர்பாக?
பதில்: அரசு பரிசீலிக்கும். மேலும், இலங்கையில் தமிழின மக்கள் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே ராஜபக்சே அவர்கள் அதிபராக இருந்தபொழுது தமிழின மக்கள் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதமில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எத்தனையே பேர் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். அம்மா, ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார்கள். இன்றையதினம் இலங்கை அதிபராக இருக்கக்கூடிய சிரிசேனா அவர்கள் திட்டமிட்டு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கக்கூடிய  ரணில் விக்ரமசிங்கே அவர்களை அகற்றிவிட்டு, ராஜபக்சே அவர்களை பிரதமராக அறிவித்தது ஜனநாயகப் படுகொலை.  அங்கிருக்கக்கூடிய தமிழின மக்கள் ஏற்கனவே அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டுமென்பதை இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து