முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி நில வழக்கு: முன்கூட்டியே விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,அயோத்தி நிலம் உரிமை சர்ச்சை தொடர்பான வழக்கை ஜனவரிக்கு முன்னதாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. வழக்கு உரிய அமர்வில், உரிய வரிசைப்படியே விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தருண் கோகோய் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று கடந்த 2010-ம் ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து 13-க்கும் மேற்பட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளன.இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் அமர்வு விசாரித்து வந்தது. தீபக் மிஸ்ரா அண்மையில் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், கே.எம்.ஜோசப் இடம்பெற்றுள்ளனர். புதிய அமர்வு முன்பு அயோத்தி வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு மீண்டும் அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், அதிருப்திக்குள்ளான இந்துத்துவா அமைப்புகள், சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துகின்றன.

இந்த நிலையில் அயோத்தி வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனக் கோரி அகில பாரத இந்து மகாசபா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த அமைப்பின் சார்பில் வழக்கறிஞர், தலைமை நீதிபதி தருண் கோகோய் முன்பு ஆஜராகி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் வழக்கை எப்போது விசாரிக்க வேண்டும் என்பதை அமர்வில் உள்ள நீதிபதிகளே முடிவு செய்ய முடியும், முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி தருண் கோகோய் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து