முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் ஒப்பந்தம்: விசாரணை நடத்தப்பட்டால் பிரதமர் மோடி, அனில் அம்பானி சிக்குவார்கள் - ராகுல் காந்தி பேச்சு

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ராய்ப்பூர் : ரபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தப்பட்டால், பிரதமர் நரேந்திர மோடி, ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி ஆகியோர் சிக்குவார்கள் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநில சட்ட சபை 2ஆம் கட்ட தேர்தலையொட்டி, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கபிர்தாம், கோர்பா, பிலாய் உள்ளிட்ட இடங்களில் ராகுல் காந்தி   பிரசாரம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பொது கூட்டங்களில் அவர் பேசியதாவது:

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசால் ரபேல் போர் விமானத்தின் விலை ரூ.526 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசோ, அந்த விமானத்தை கூடுதலாக ரூ.1,600 கோடி விலை கொடுத்து வாங்குகிறது. ரபேல் ஒப்பந்தம் குறித்து சி.பி.ஐ. இயக்குநர் அஸ்தானா விசாரணையை தொடங்கினார். இதையடுத்து நள்ளிரவில் அவரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்து விட்டார். இந்த விவகாரம் குறித்து எப்போது விசாரணை தொடங்கப்படுகிறதோ, அப்போது பிரதமர் மோடி, அனில் அம்பானியின் பெயர்கள் வெளிவர தொடங்கும்.

ரூ.58,000 கோடி மதிப்புடைய ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரை டஸால்ட் நிறுவனத்திடம் பரிந்துரை செய்தது பிரதமர் மோடிதான். பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் நாட்டில் நடைபெற்ற ஊழல்களிலேயே மிகப்பெரியது. இதனால் பாதிக்கப்பட்டது ஏழைகள்தான். கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்கள் பாதிப்படையவில்லை.பனாமா ஆவணங்களில் பெயர்கள் இடம்பெற்றுள்ள சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், அவரது மகன் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக  பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை. சத்தீஸ்கருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நீண்ட தொடர்பு உண்டு. இந்த உறவானது, அன்பு சம்பந்தப்பட்டது; அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல.

நீர்வளம், வன வளம், சுரங்கங்கள், கனிமங்கள் ஆகியவற்றை கொண்டு பார்த்தால், சத்தீஸ்கர் பணக்கார மாநிலமாகும். ஆனால், பாஜக அரசின் கொள்கைகளால், சத்தீஸ்கர் மக்கள் ஏழைகளாகவே உள்ளனர்.

நாட்டின் வளர்ச்சிக்காக பாமர மக்கள், வியர்வையும், ரத்தத்தையும் உழைக்கின்றனர். இதை நமது பிரதமர் புரிந்து கொள்ளவில்லை. இதற்கு அவரது ஆணவமே காரணமாகும்.

விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பா.ஜ.க. அரசு நிலத்தை அபகரிக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் நிலத்தை வலுக்கட்டாயமாக எடுக்காது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், சத்தீஸ்கரில் மக்களின் அரசை ஏற்படுத்துவோம். என்றார் ராகுல் காந்தி

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து