முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரம் மின் ஊழியர்கள் கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு வருகிறார்கள் மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,டெல்டா மாவட்டங்களில் மின் இணைப்பு வழங்க ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரம் மின் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மின்துறை அமைச்சர்.பி. தங்கமணி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர், கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலினால் ஏற்பட்டுள்ள மின்தடையை சீர்செய்து, துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, உடனடியாக மின் விநியோகம் வழங்குவது குறித்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கஜா புயலினால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மின்சார வாரியத்திற்கு மிக அதிகளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை நடந்த கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 84,836 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. 4,230 கி.மீ தூரம் உயர்மின் பாதையும், 841 மின்மாற்றிகளும், 201 துணைமின் நிலையங்களும் சேதமடைந்துள்ளன. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று (நேற்று) மாலையே மின்சாரம் வழங்கப்படும். இதே போன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கு அதிகமாக மின் இணைப்பு வழங்கப்பட்டதுடன் அம்மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கஜா புயலினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் பழுதுகளை சரி செய்யும் வகையில் ஆந்திராவிலிருந்து 1000 பணியாளர்கள் கேட்கப்பட்டு  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வர உள்ளனர். இதே போன்று பிற மாவட்டங்களிலிருந்தும் பணிகள் முடித்த 1000 பணியாளர்கள் வர உள்ளனர். இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2000 பணியாளர்கள் கூடுதலாக வர உள்ளனர். இதன்மூலம் நகரப் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளுக்கு படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும்.

கிராமப் பகுதிகளில் அதிகளவு மரங்கள் சாய்ந்துள்ளதால் மரங்கள் அப்புறப்படுத்திய பின்னரே பணிகள் மேற்கொள்ள முடிகிறது. இங்கு கிட்டத்தட்ட 20 உயர்மின் கோபுரங்கள் உள்ளன. உயர்மின் கோபுரங்கள் முழுமையாக சரி செய்தால்தான் மின்சாரம் வழங்க முடியும். 201 துணை மின் நிலையங்களில் 56 துணை மின் நிலையங்கள் நன்றாக உள்ளது. இதுவரை 6 உயர் மின் கோபுரங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 14 உயர் மின் கோபுரங்கள் 3 நாட்களுக்குள் சரி செய்யப்படும். இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் போர்கால அடிப்படையில் மின்விநியோகம் வழங்கப்படும்.இதற்கிடையே கிராமப் பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் தடையின்றி வழங்கப்படும். இப்பணிகளில் ஏதேனும் தடை ஏற்பட்டால் அதனையும் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இயற்கை சீற்றத்தினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தமிழக அரசு முழுவதுமாக உணர்ந்துள்ளது. பொதுமக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதன்மூலம் பணிகள் மிக வேகமாக நடைபெறும்.

கடந்த காலங்களில் வர்தா புயல், ஒகி புயல் போன்ற இதை விட அதிக சேதங்கள் ஏற்படுத்திய புயல் பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சார வாரியத்திற்கு மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய்க்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கணக்கீடப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுக்கும் பணி முடிவடையவில்லை.முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு பொருளாதாரம் தடையாக இல்லை என்பதை தெரிவித்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். இதன் மூலம் மீட்புப் பணிகளில் 14,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதுடன் கூடுதலாக 2000 பணியாளர்கள் என மொத்தம் 16,000 பணியாளர்கள் பணிபுரிய உள்ளனர். பணியாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு முன்கூட்டியே போதுமான அளவு மின்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் போதுமான அளவு மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் பணியாளர்கள் இருக்கின்ற காரணத்தினால் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கஜா புயலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையின் மூலம் புயல் கரையை கடக்கும் அதிகாலை நேரத்தில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என முன்கூட்டியே அறிவித்து மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதன்மூலம் பொதுமக்கள் உயிர்பாதுகாக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையால் இன்றைய தினமே குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நகர்புறங்களுக்கு இணையாக கிராமப் புறங்களுக்கு மின் இணைப்பு வழங்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து