முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

ராமேசுவரம் : எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து சென்றனர். மேலும் படகை மூழ்கடித்து மீனவர்களை விரட்டியடித்தனர்.

மீன்கள் பறிமுதல்

ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று அதிகாலை இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க உங்களுக்கு அனுமதி இல்லை என எச்சரித்தனர். தொடர்ந்து அவர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். ஏற்கனவே பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

படகு மூழ்கியது

அதை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது கடல் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் வேர்க்கோட்டைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் படகில் வந்த ராமு (வயது45), காட்டு ராஜா (50), தங்கவேல் (42), முருகன் (30) ஆகிய 4 மீனவர்களை சிறைபிடித்தனர். தொடர்ந்து வேலாயுதம் படகை ரோந்து கப்பலால் மோதச்செய்து சேதப்படுத்தினர். இதில் படகில் தண்ணீர் புகுந்து மூழ்கியது.

சிறையிலடைப்பு

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 4 பேரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். ஏற்கனவே தூத்துக்குடியை சேர்ந்த 8 பேரும், ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 பேரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேர் என 16 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து