பஞ்சாப் முதல்வர் குறித்த சித்து கருத்து: இது கேப்டன்களுக்கு இடையிலான மோதல் என்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்

ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2018      இந்தியா
sushma 2018 9 10

ஜெயப்பூர் : பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தொடர்பாக அம்மாநில அமைச்சர் சித்து தெரிவித்த கருத்து குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கூறும் போது, இது கேப்டன்களுக்கு இடையிலான மோதல் என்றார்.

ராஜஸ்தான் மாநிலம், பிகாநீரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த மோதல் 3 கேப்டன்களுக்கு இடையிலானது. ஒருவர் கிரிக்கெட் கேப்டன்(பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்), மற்றொருவர் ராணுவ கேப்டன்(கேப்டன் அமரீந்தர் சிங்) மற்றொருவர் காங்கிரஸ் கேப்டன்(ராகுல்). இதற்கு மேல், இந்த விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை. ராஜஸ்தானில், தேர்தல் சூழ்நிலையை மாற்ற வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது.

பிரதமர் மோடி என்ன மாதிரியான இந்து என காங்கிரஸ் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம், வளர்ச்சி என்ற எங்களின் திட்டத்தை மாற்ற அவர்கள் விரும்புகின்றனர். காங்கிரசின் இது போன்ற சூழ்ச்சிகளுக்கு பா.ஜ.க. அடிபணியாது. தேர்தல் 5 மாநிலங்களில் வளர்ச்சியில் தான் பா.ஜ.க. கவனம் செலுத்துகிறது. ராஜஸ்தானில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரை இணைக்கவும், சிக்கலில் இருப்பவர்களை மீட்கவும் வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மானசரோவர் யாத்திரை சென்ற பிகாநீரை சேர்ந்த 6 பேரை உடனடியாக மீட்டோம். ஏமனில் உள்நாட்டு குழப்பத்தில் சிக்கியவர்களை தகவல் அறிந்த உடன், விரைவாக அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டோம். எச்1பி விசா விவகாரம் குறித்து பிரதமர் மோடி, சர்வதேச அமைப்புகளிடம் பேசியுள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இங்கு வந்த போதும், இது குறித்து பேசியுள்ளோம். பிரதமர் மோடிக்கும், அதிபர் டிரம்பிற்கும் இடையே நல்லுறவு உள்ளது. இதனால் இந்தியாவின் நலன்களை பாதிக்கும் வகையில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்காது என நம்புகிறோம். பயங்கரவாதம் இல்லாமல், நிலையான சூழ்நிலையில் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடக்கும். எல்லை பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து இந்தியாவும், சீனாவும் முயற்சி செய்து வருகின்றன. இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து