கிறிஸ் கெயில் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஸி. நாளேடு ரூ.15 கோடி இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      விளையாட்டு
Chris Gayle 2018 12 03

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஊடகக் குழுமம் மீது மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் தொடர்ந்த அவதூறு வழக்கில் ரூ.15.50 கோடி இழப்பீடு வழங்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

உடல் அசைவுகள்...

ஆஸ்திரேலியாவின் ஃபேர்பேக்ஸ் மீடியா குழுமத்தின் கீழ், தி சிட்னி மார்னிங் ஹெரால்டு, தி ஏஜ் ஆகிய நாளேடுகள் வெளிவருகின்றன. இந்த ஊடகக் குழுமம்தான் கெயிலுக்கு ரூ.15.50 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியின் போது, மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில், தி சிட்னி மார்னிஸ் ஹெரால்ட் நிருபரிடம் மோசமான உடல் அசைவுகளைக் காட்டினார் என்று செய்தி வெளியானது. இந்த நாளேட்டில் மட்டுமல்லாது, தி ஏஜ் நாளேட்டிலும் தொடர்ந்து கிறிஸ் கெயில் குறித்த செய்திகள் வெளியாகின.

பொய்யானவை...

ஆனால், இந்தச் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை தான். ஓய்வறையில் இருந்தபோது நிருபர்கள் யாரும் எனது அறைக்கு வரவில்லை. என்னுடன் என்னுடைய சக அணி வீரர் டிவேன் ஸ்மித் உடன் இருந்தார் என்று கூறி கிறிஸ் கெயில் மறுத்தார். மேலும், இந்தச் செய்திகள் தனது நற்பெயருக்கும், மரியாதைக்கும் களங்கம் விளைவிக்கும் செயல் எனக் கூறி ஃபேர்பேக்ஸ் குழுமத்தின் மீது கெயில் ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

சாதகமான தீர்ப்பு

இந்த வழக்கு ஆஸ்திரேலியாவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் விசாரணையின் போது, நேரில் சென்று மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டிவைன் ஸ்மித் சாட்சி அளித்தார். அந்த நிருபர்கள் குறிப்பிடும் நாள் அன்று ஓய்வறைக்கு வரவில்லை, அப்போது கெயிலும்தான் அறையில் இருந்தேன் என்று தெரிவித்தார். விசாரணை முடிந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் கெயிலுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. ஆனால், இழப்பீடு விவரங்கள் ஏதும் அறிவிக்கவில்லை.இந்நிலையில், கிறிஸ் கெயிலின் அவதாறு வழக்கில் உச்ச நீதிமன்றம் இழப்பீடு விவரங்களை அறிவித்தது.

ரூ.15.5 கோடி இழப்பீடு...

இது தொடர்பாக நீதிபதி லூசி மெக்காலம் கூறுகையில், “ கிறிஸ் கெயில் தொடுத்த அவதூறு வழக்கில் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபிக்க ஃபேர்பேக்ஸ் ஊடகக் குழுமத்தால் நிரூபிக்க முடியவில்லை. பொய்யான செய்தியை எழுதி கிறிஸ் கெயிலின் மரியாதையை மிகவும் கெடுத்துவிட்டீர்கள். தான் குற்றமற்றவர் என்பதற்காக கெயில் அளித்த ஆதாரங்கள் அனைத்தும் வலுவானவை. அவை அதிர்ச்சியாகவும் இருந்தன. ஆதலால், கிறிஸ் கெயிலுக்கு 3 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் (ரூ.15.50 கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு குறித்து ஃபேர் பேக்ஸ் ஊடகத்தின் சார்பில் கூறுகையில், இந்தத் தீர்ப்புக்கு எதிராக விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து