தி.மு.க. கூட்டணியின் வேண்டா விருந்தாளி வைகோ - பொன். ராதாகிருஷ்ணன் கிண்டல்

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      தமிழகம்
Pon Radhakrishanan 2018 11 21

கோவை : தி.மு.க. கூட்டணியில் வேண்டா விருந்தாளியாக வைகோ உள்ளார் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் கஜா புயல், ஏழு பேர் விடுதலை போன்ற விவகாரங்களிலும் மேகதாது அணை கட்டும் விவகாரத்திலும் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். பிரதமர் மோடியை தமிழ் நாட்டுக்குள் விட மாட்டோம். வந்தால் கருப்புக் கொடி காட்டுவோம் என பேட்டி அளித்திருந்தார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமரைப் பற்றிப் பேசும் போது சற்று நிதானமுடன் பேச வேண்டும். யாரையோ திருப்திப்படுத்த அவர் இவ்வாறு பேசுகிறார். தமிழகத்தில் பிரதமரை அனுமதிக்க மாட்டோம் கருப்புக் கொடி காட்டுவோம் என்றெல்லாம் பேசுகிறார். பிரதமர் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார். நீங்கள் முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள். துரைமுருகன் போன்றவர்கள் கூட்டணி குறித்து என்ன பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எப்படியாவது தி.மு.க. கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்கிற நிலைக்கு ம.தி.மு.க தள்ளப்பட்டுள்ளது என்றால் கேட்கவே வேடிக்கையாக உள்ளது. தி.மு.க.வில் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஏளனமாகப் பார்க்கும் நிலைக்கு ம.தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. வேண்டா விருந்தாளியாக ம.தி.மு.க. உள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து