ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். தலைமையில் நடக்கிறது: இன்று ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தின பேரணி - நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கிறார்கள்

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      தமிழகம்
jayalalitha memorial 2018 12 02

சென்னை : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி நடக்கிறது. இந்த பேரணியின் முடிவில் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதிமொழி ஏற்கின்றனர்.

ஊர்வலம் - அஞ்சலி...

இது குறித்து அ.தி.மு.க. ஓருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

தமிழக மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் அ.தி.மு.க. நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா நம்மையெல்லாம் ஆற்றொணாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரராகிய நாள் 5-12-2016. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாளான இன்று காலை 9.30 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு அம்மாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனை தொடர்ந்து நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிர்வாகிகள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் மன்றம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, ஜெயலலிதா பேரவை, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்ப அணி, வர்த்தக அணி மற்றும் கலைப்பிரிவு உட்பட அ.தி.மு.க.வின் அனைத்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள்...

இந்த அமைதி பேரணி குறித்து கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முடிவு...

இந்த கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தின பேரணியை சிறப்பாக நடத்துவது என்றும் லட்சக்கணக்கில் அ.தி.மு.க.வினர் பேரணியில் பங்கேற்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இன்று நடைபெறும் பேரணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையேற்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதன் பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழியும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து