சாகித்ய அகாதமி விருதுக்கு 'சஞ்சாரம்' நாவல் தேர்வு: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      தமிழகம்
cm edapadi1 2018 10 17

சென்னை : மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளா்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

தலைசிறந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “சஞ்சாரம்” என்ற நாவலுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது அறிவித்துள்ளது. எஸ். ராமகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

புகழ் பெற்றவை

தற்கால தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆன எஸ். ராமகிருஷ்ணன், பல சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், திரைக்கதைகளை இயற்றியுள்ளார். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம் ஆகிய கட்டுரை தொகுப்புகளும், எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா ஆகிய வரலாற்று நூல்களும் புகழ் பெற்றவையாகும். இவர் அட்சரம் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது சிறுகதைகள் ஆங்கிலம், பிரெஞ்ச், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.   

பெருமைக்குரியவர்...

இவர் எளிய நடையில், பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் பல சிறுகதைகளையும், நாவல்களையும் படைத்தவர் என்ற பெருமைக்குரியவர். இவர் தன்னை முழுமையாக அர்பணித்து தமிழ் எழுத்துக்களில் தனக்கென ஒரு தனி  இடத்தைப் பிடித்தவர். எஸ். ராமகிருஷ்ணன் பல விருதுகளின் சொந்தக்காரர். இந்நிலையில் மத்திய அரசு இவருக்கு சாகித்ய அகாதமி விருது அறிவித்து இருப்பது அவரின் புகழுக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது.

வாழ்த்துகள்...

சாகித்ய அகாதமி விருது பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தமைக்காக, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மேன்மேலும் இதுபோன்ற பல விருதுகளை பெற எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து