தமிழக சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ அன்பழகன் பேச்சுக்கு சபாநாயகர் கண்டனம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018      தமிழகம்
TN assembly 2018 10 12

சென்னை : தமிழக சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ அன்பழகனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் தனபால் அதைஅவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார்.

சிறப்பு கூட்டம்

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டம் நேற்று மாலை 5.35 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்குமுன்பு மாலை 3.51 மணிக்கு எதிர்க்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன் வந்தார். அவரை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் வந்தனர். வந்ததும் துரைமுருகனை சந்தித்து மகிழ்ச்சியுடன் கைகுலுக்கிக்கொண்டனர். 3.57 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அவருக்கு அதி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.

தனித்தீர்மானம்...

இதற்கிடையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருக்கு தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். சரியாக 4 மணிக்கு சபாநாயகர் வந்தார். சபையின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப்பெரின் என்ற திருக்குறளை படித்து அதன் பொருளை விளக்கினார். இதைத்தொடர்ந்து மேகதாது அணை விவகாரத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.

கஜா புயல் குறித்தும்...

இது தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்றக்கட்சித்தலைவர் ராமசாமி, முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கர், ஆர்.கே.நகர் உறுப்பினர் தினகரன் மற்றும் உறுப்பினர்கள் தமிமுன் அன்சாமி, தனியரசு ஆகியோர் தனித்தீர்மானத்தை வரவேற்று பேசினர். எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மேகதாது விவகாரத்தோடு இந்த கூட்டத்தை முடித்து விடக்கூடாது. கஜா புயல் குறித்தும் மத்திய நிவாரணம் வழங்காதது குறித்து பேசுவதற்காக நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சபாநாயகர் கேட்டு...

இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு இருக்கிற தீர்மானம் மேகதாது பிரச்னை தான், மற்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மேகதாது பிரச்னை வலுவிழந்து போய் விடும் என்று தெரிவித்தார். இந்த பிரச்னைக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து பேசுமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார். மாலை 4.12 மணிக்கு தனது பேச்சை தொடங்கிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் 4.29 மணிக்கு முடித்தார். இந்த சிறப்பு கூட்டத்திற்கு மாலை 4 மணிக்கு குறித்த நேரத்தில் வந்த உறுப்பினர் தினகரன், இந்த தீர்மானத்தை தானும் ஆதரிப்பதாக ஒற்றைவரியில் கூறி விட்டு அமர்ந்தார்.

அவைக்குறிப்பில்...

இந்த கூட்டத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமிக்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 60 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணா மத்திய அரசில் இருப்பவர்கள் தேனாக பேசுவார்கள். தேளாக கொட்டுவார்கள் என்று அண்ணா பேசி இருப்பதை சுட்டிக்காட்டினார். இதைத்தொடர்ந்து துரைமுருகன் கூறி்ய சில வாசகங்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

தவறாக பேசவில்லையே...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிய பின்னர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், குறுக்கிட்டு, காவிரி பிரச்னையில் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். அவருடைய பெருமைகளை மறைப்பது அழகல்ல என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டீர்கள் அதற்கு தான் பதிலளித்தேன். எங்களுடைய தரப்பு நடவடிக்கைகளை நான் தெரிவித்தேன். உங்களுடைய தரப்பை நான் தடுக்கவில்லையே உங்கள் தலைவர் பற்றி நான் தவறாக பேசவில்லையே என்று பதிலளித்தார்.

பெரும் பரபரப்பு...

அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் அன்பழகன், ரங்கநாதனும் எழுந்து ஏதோ ஆவேசமாக தெரிவித்தனர். இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது சபாநாயகருக்கும் தி.மு.க. உறுப்பினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் பேச்சுக்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அன்பழகன் தெரிவித்த சில வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

அவை ஒத்திவைப்பு...

முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்படுவதால் இந்த பிரச்னையை இதோடு விட்டுவிடுகிறேன் என்று தெரிவித்தார். இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பபாடி பழனிசாமியின் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய சட்டசபையின் சிறப்பு கூட்டம், மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற சட்டசபை சிறப்பு கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, நடிகர் கருணாஸ் ஆகியோர் பங்கேற்கவில்லை.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து