அடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பதிலடி : 7 விக்கெட்டிற்கு 191 ரன்கள் எடுத்து திணறல்

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2018      விளையாட்டு
Indian Hocky Team 2018 12 07

Source: provided

அடிலெய்டு : அடிலெய்டு டெஸ்டில் இந்திய பந்துவீச்சாளர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் ரன் குவிக்க திணறிய ஆஸ்திரேலியா ஹெட் அரைசதத்தால் 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா 250 ரன்...

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் நாளில் எடுத்த 250 ரன்னிலேயே ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

ஆரம்பமே திணறல்...

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கவாஜா 28 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஹாரிஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் கைப்பற்றினார்.

டிராவிஸ் ஹெட்...

5-வது வீரராக களம் இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 34 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 8-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் மிட்செல் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

191 ரன்கள் எடுத்து...

ஆஸ்திரேலியா 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். தற்போது வரை ஆஸ்திரேலியா 59 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்றைய 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் டிராவிஸ் ஹெட் ஸ்டார்க் துணையுடன் இந்தியாவின் ஸ்கோரை எட்ட முயற்சி செய்வார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து