அரசு ஏசி பஸ்களில் கட்டணம் குறைப்பு

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2018      தமிழகம்
ac bus

சென்னை, தமிழ்நாடு அரசு ஏசி பஸ்களில் திங்கள் முதல் வியாழன் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 10 சதவீதம் கட்டணம் குறைப்பு காரணமாக அரசு ஏ.சி. பஸ்களில் சராசரியாக ரூ.40 முதல் ரூ.150 வரை குறைந்துள்ளது.

புதிய ஏ.சி. பேருந்துகள்

தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் கடந்த ஜூலை மாதம் படுக்கை வசதி கொண்ட புதிய ஏ.சி. பஸ் சேவைகளை தொடங்கியது. 34 ஏ.சி. படுக்கை வசதி பஸ்கள், ஏ.சி. இல்லாத 2 படுக்கை வசதி பஸ்கள், 10 அல்ட்ரா கிளாசிக் பஸ்கள் (கழிவறை வசதி கொண்டது), 6 ஏ.சி. படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பஸ்கள் என 52 சொகுசு பஸ்களை தற்போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.

10 சதவீதம் குறைப்பு...

நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திருச்சி, போடி, கீழக்கரை, கோவை, பெங்களூர், எர்ணாக்குளம், தஞ்சை, சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு நகரங்களுக்கு இந்த ஏ.சி. படுக்கை பஸ்கள் இயக்கப்படுகின்றன. திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பயணிகள் வருகை மிக, மிக குறைந்து போனது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மட்டுமே ஓரளவு பயணிகள் பயணம் செய்தனர். இதுபற்றி ஆய்வு செய்தபோது அதிக கட்டணம்தான் முக்கிய காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து ஏ.சி. படுக்கை வசதி பஸ்களின் கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசு ஏ.சி. பஸ்களில் 10 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.150 வரை...

ஏ.சி. படுக்கை வசதி பஸ்களில் கிலோ மீட்டருக்கு சராசரியாக 20 பைசா குறைக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா கிளாசிக் பஸ்கள், ஏ.சி. இல்லாத படுக்கை வசதி இல்லாத பஸ்களில் கிலோ மீட்டருக்கு 10 பைசா குறைக்கப்பட்டுள்ளது. 10 சதவீதம் கட்டணம் குறைப்பு காரணமாக அரசு ஏ.சி. பஸ்களில் சராசரியாக ரூ.40 முதல் ரூ.150 வரை குறைந்துள்ளது. இந்த கட்டண குறைப்பு நேற்று (6-ந்தேதி) முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த கட்டண குறைப்பு திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே அமலில் இருக்கும்.வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழையக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல திருவிழா மற்றும் பண்டிகை நாட்களிலும் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மகிழ்ச்சி...

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் வி.பாஸ்கரன் கூறியதாவது:-
பயணிகளின் கோரிக்கையை ஏற்று தொலைதூர அரசு ஏ.சி. படுக்கை வசதி பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. படுக்கையும் இருக்கையும் கொண்ட பஸ்களில் படுக்கைக்கு மட்டுமே கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இருக்கைக்கான கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார். அரசு ஏ.சி. பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதற்கு பயணிகள் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து