எதிரணிக்கு அஸ்வின் மிகவும் ஆபத்தானவர் : சுனில் கவாஸ்கர் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2018      விளையாட்டு
Sunil Gavaskar 2018 10 30

Source: provided

அடிலெய்டு : இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் எதிரணிக்கு மிகவும் ஆபத்தானவர் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

 250 ரன்களுக்கு...

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது ஆஸ்திரேலியா. அஸ்வின் சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.

3 விக்கெட்கள்...

87 ரன்னிற்கு 4 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. அப்போது, ஹண்ட்ஸ்கோம், ஹெட் இருவரும் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹண்ட்ஸ்கோம் 34 ரன்னில் ஆட்டமிழந்த போதும், ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆட்டநேர இறுதியில், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. ஹெட் 61 ரன்களுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்கள் சாய்த்தார். இஷாந்த் சர்மா, பும்ரா தலா இரண்டு விக்கெட்கள் எடுத்தனர். 

கவாஸ்கர் பாராட்டு...

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய அஸ்வினை சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அஸ்வின் எதிரணிக்கு மிகவும் ஆபத்தானவர். ஆஸ்திரேலிய அணியின் ஆஃப் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயனிடம் இருந்து அவர் கற்றுக் கொண்டுள்ளார். கேப்டன் விராட் கோலி எதிர்பார்த்ததை விட அஸ்வின் சிறப்பாக செயல்பட்டுள்ளார்” என்றார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து