முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாநில சட்ட சபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அண்மையில் சட்ட சபை தேர்தல் நடைபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிஸோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இத்தேர்தல் முடிவுகள், பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.

இன்று காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. இதையொட்டி, 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பாஜக ஆளும் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12, 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 74 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,269 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதேபோல், மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில், 75 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் மொத்தம் 2,899 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து பா.ஜ.க. தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. இப்போது 4-ஆவது முறையாக ஆட்சியை அக்கட்சி தக்க வைக்குமா? என்பது இன்று  தெரியவரும். எனினும், இவ்விரு மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று வாக்கு கணிப்புகள் தெரிவித்துள்ளன.

 பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் மொத்தம் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக வாக்கு கணிப்புகள் தெரிவித்துள்ளன.

 வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலம் மிஸோரம் மட்டுமே. இங்குள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மிஸோரமில் முக்கிய எதிர்க்கட்சியான மிஸோ தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக வாக்கு கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில், கடந்த 7-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு தேர்தல் களத்தில் 1,821 வேட்பாளர்கள் உள்ளனர். ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்),  பா.ஜ.க ஆகிய கட்சிகள் தனித்தும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ஜன சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும் தேர்தல் களத்தில் உள்ளன. இந்த மாநிலத்தில் டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புள்ளதாக வாக்கு கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து