முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இதில் அயோத்தி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று தெரிகிறது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்குவது வழக்கம். ஆனால் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் தொடங்குகிறது. அந்த வகையில் இன்று பாராளுமன்றம் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 8-ம் தேதி முடிகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிற 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிற நாளில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பான முழுமையான கூட்டத்தொடர் இதுதான் என்பதால் இந்த தொடர் சிறப்பு பெறுகிறது.

குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதையொட்டி, பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் நேற்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதேபோன்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் அனைத்துக் கட்சி கூட்டங்களை நடத்தினர். இந்த கூட்டங்களில், குளிர்கால கூட்டத்தொடர் அமைதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடக்க எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை நல்குமாறு ஆளுங்கட்சி கோரிக்கை வைத்தது.

அயோத்தி - வதேரா...

இன்று தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ராமர் கோவில் பிரச்சினையில் ஓரணியில் நின்று புயலைக் கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது ராஜஸ்தானில் எழுந்த நில மோசடி புகாரில், அவருக்கு சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களிலும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்திய விவகாரத்தை காங்கிரஸ் கட்சி எழுப்பும் என கூறப்படுகிறது.சி.பி.ஐ. இயக்குனர், சிறப்பு இயக்குனர் மோதலில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பப்போவது உறுதி.

ரபேல் போர் விமான...

ரபேல் போர் விமான பேர விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற நிலையில், பாராளுமன்றத்திலும் இது குறித்து அவர் குரல் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மசோதாக்களை பொறுத்தமட்டில் ‘முத்தலாக்’ மசோதா, மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற பாரதீய ஜனதா கூட்டணி அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து