முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா? சமூக ஆர்வலர்கள் சூடான கேள்வி

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை, தி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

குற்றச்சாட்டுகள்...

கரூரை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான மந்திரி சபையில் கடந்த 2011-ம் ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து அவரை ஜெயலலிதா மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார். அவருக்குப் பதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க.வில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள்...

ஜெயலலிதா மீண்டும் முதல்வரான போதும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. காரணம், போக்குவரத்து துறை அமைச்சராக இவர் இருந்த போது பல இளைஞர்களுக்கு கண்டக்டர் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இதை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அவ்வப்போது குற்றம் சாட்டி வந்தன.

தி.மு.க.வில் இணைத்து...

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு செந்தில் பாலாஜி டிடிவி தினகரன் அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். தினகரனின் அ.ம.மு.க. இயக்கத்தின் அமைப்பு செயலாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களுடன் செந்தில் பாலாஜியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வது தொடர்பாக தினகரனுக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இதனால் அதிருப்தியில் இருந்த செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி தி.மு.க.வில் இணைவது என்று முடிவெடுத்தார். இது தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதை நேற்று ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார் செந்தில் பாலாஜி. தனது ஆதரவாளர்கள் படை சூழ அறிவாலயம் சென்ற அவர் அங்கு ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அதற்கான உறுப்பினர் புத்தகத்திலும் அவர் கையெழுத்திட்டார்.

மாபெரும் துரோகம்...

அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர், அமைச்சர் என பல்வேறு பதவிகளில் இருந்து பதவி சுகம் அனுபவித்தவர்தான் இந்த செந்தில் பாலாஜி. அப்படிப்பட்ட இவர் இன்றைக்கு தி.மு.க.வுக்கு தாவியிருக்கிறார். தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை தோற்றுவித்தார் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் பணியாற்றி தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவும் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்தார். ஒரு கட்டத்தில் கருணாநிதி ஒரு தீய சக்தி என்றும் ஜெயலலிதா விமர்சித்தார். அவரது தலைமையில் பணியாற்றி அமைச்சர் பதவி உள்ளிட்ட பதவிகளில் இருந்து சுகபோகங்களை அனுபவித்த செந்தில் பாலாஜி இன்று தி.மு.க.வுக்கு தாவியிருப்பது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது ஜெயலலிதாவுக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்று அ.தி.மு.க.வினர் கொதித்துப் போயுள்ளனர். இது ஒருபுறமிருக்க, செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த தி.மு.க. இன்று இவரை எப்படி தனது இயக்கத்தில் சேர்த்துக் கொண்டது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மாற்றுக் கட்சியில் இருந்தால் மோசடி பேர்வழி. தி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த கேள்விக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும்.

கவலையில்லையாம்...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அ.ம.மு.க. இயக்கத்தின் மாநில அமைப்பு செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்தவர். இப்போது அந்த இயக்கத்துக்கும் டாடா காட்டி விட்டு இவர் தி.மு.க.வுக்கு சென்று விட்டார். இது பற்றி கருத்து கூறிய டிடிவி தினகரன், நெல் மணிகளோடு களைகளும் வளர்வது நிலத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும்தான் என்று ஆத்திரத்தோடு கூறியுள்ளார். மேலும் போலிகள் போவதை பற்றி கவலையில்லை. போனால் போகட்டும் போடா என்கிற பாணியில் தினகரன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்ததை பற்றி பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

பாதை தவறி விட்டார்...

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இது பற்றி கூறுகையில், செந்தில் பாலாஜி பாதை தவறி விட்டார் என்று கூறியுள்ளார். அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், கடலில் கரைத்த பெருங்காயம் போல பழைய பாசத்தின் அடிப்படையிலேயே அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார். பிரிந்து சென்றவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தால் எதிர்காலம் இருக்கும். தினகரன் கட்சியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். பலம் இல்லாதவர்கள் தான் மற்றவர்களை தங்கள் பக்கம் இழுப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். எது எப்படியோ, மாற்றுக்கட்சியினரை விமர்சிக்கும் தி.மு.க. தங்கள் பக்கம் அவர்கள் வந்தால் பொன்னாடை போர்த்தி வரவேற்கிறது. இதில் என்ன லாஜிக் உள்ளது என்று தெரியவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து