முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டபம் பகுதியில் விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் விலையில்லா சைக்கிள்களை மாணவர்களுக்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன்  தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 14 பள்ளிகளைச் சார்ந்த 2,630 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.97லட்சத்து 88ஆயிரத்து 200 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் விதமாக விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா மிதிவண்டிகள், ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற 14 விதமான மாணவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அந்த வகையில் தமிழ்நாடு அரசு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 24ஆயிரத்து 151 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிட திட்டமிடப்பட்டு, இதுவரை 2 கட்டங்களாக 12ஆயிரத்து 498 மாணாக்கர்களுக்கு ரூ.4.65 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக மூன்றாம் கட்டமாக இன்று மண்டபம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 14 பள்ளிகளை சார்ந்த 2ஆயிரத்து 630 மாணாக்கர்களுக்கு ரூ.97லட்சத்து 88ஆயிரத்து 200 மதிப்பிலான தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. 
மேலும், இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக விளங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசின் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.   இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 38.53 இலட்சம் மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.  நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும் தொழிற்பயிற்சி பயிலும் மாணாக்கர்களுக்கும் என மொத்தம் 15 இலட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.  அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் பணிகள் நிறைவடைந்துள்ளன.  2019 ஜனவரி முதல் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும்.
இதுதவிர, தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக, பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் அதிக அளவிலான டிவி சேனல்களை பார்த்து மகிழும் விதமாக விலையில்லா செட்அப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதைப்போல ஊரகப்பகுதிகளில் இணைய பயன்பாட்டினை அதிகரிக்கும் நோக்கில் ஆப்டிகல் பைபர் கேபிள் மூலமாக தமிழகத்திலுள்ள 12ஆயிரத்து 524 ஊராட்சிகளை இணைய வழியில் ஒருங்கிணைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்து சிரமிமின்றி இணைய வழியில் பெற்று பயனடைய வாய்ப்பாக அமையும். மாணவ, மாணவியர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்வதில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாததாகும்.  மாணவ, மாணவியர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்பதோடு,  சமூக அக்கறையுடன்  தங்களது எதிர்காலம் குறித்த தீர்க்கமான சிந்தனையை வளர்த்துக்கொண்டு அதனை அடைவதற்கு கடுமையாக உழைப்பதன் மூலம் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். இவ்வாறு பேசினார். இந்த விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் (ராமநாதபுரம்) டி.பிரேம், (மண்டபம்) பாலதண்டாயுதபாணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் ஜெயஜோதி, திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் முனியாண்டி, நகர் செயலாளர் சீமான்மரைக்காயர், அவைத்தலைவர் சுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர் மைதீன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் சீனிகாதர்மைதீன், ரமேஷ், நம்புவேல், பேரவை செயலாளர் சலீம், இளைஞர் அணி செயலாளர் ஜாகிர்உசேன், மேலவை பிரதிநிதி பூபதிரஜினிகாந்த், காளிதாஸ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பூபதி உள்பட அரசு அலுவலர்கள், பள்;ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து